Tamilnadu MNM Leader Kamalhaasan Twitter Update : கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்ப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில், குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து 6 மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஹிஜாப் அணிந்து வருவது இந்திய அரசியலமைப்பு எங்களுக்கு அளித்த உரிமை எங்களை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அருகில் உள்ள பல கல்லூரிகளுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரிகளும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததாக கூறப்படுகிறது. மேலும் முஸ்லிம் மாணவிகள் ஹாஜிப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்து மாணவர்களும், கழுத்தில் காவி துண்டுடன் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் கல்லூரிக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மதவாதத்திற்கு பின்னால் மத அடிப்படைவாதிகள் பலர் உள்ளனர் என்றும், தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த போராட்டத்தை தூண்டி விடுகின்றனர் என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2022
கமல்ஹாசனின் இந்த பதிவு ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனால் தற்போது ஹிஜாப் விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.