என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பிடும், வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் கூட்டம் ராஜ்சபா எம்.பி. சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன் பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர்கள் எம்.பி.குமார், எம்எல்ஏ அர்ஜூனன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்து இதுவரை இழப்பீடு மற்றும் வேலை வாயப்பு கிடைக்காதவர்கள் சி.வி.சண்முகத்தை சந்தித்து முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறுகையில்,
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது 3-வது சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 21 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி படிப்படியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பாக இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒன்றாவது சுரங்கத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலத்திகே இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இவ்வாறு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இழப்பீடு நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதே சமயம் இப்போது அவர்கள் குறிப்பிட்டுள்ள தொகை இன்றைய சந்தை மதிப்பில் மிகவும் குறைவானது. நிலம் கொடுக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 2005க்கு பிறகு இன்றுவரை ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தமிழகத்தின் வளத்தை வைத்து பயன்பெறுகின்ற என்.எல்.சி நிறுவனம் இங்கே படித்த இளைஞர்களுக்கு நிறுவனத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கை. ஆனால் இது குறித்த திமுக அரசும் தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் பேசி தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் கோவை குண்டுவெடிப்பு குறித்து பேசிய அவர், தமிழகத்தில் குண்டுவெடிப்பு குறித்து நீங்களும் நானும் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழகம் ஸ்டாலின் அரசிற்கு நடிகை நயன்தாராவிற்கு குழந்தை முறையாக பிறந்ததா இல்லையா என்பது தான் கவலை. அதனால் அவர்களுக்கு குண்டு வெடிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை. நயன்தாராவுக்கு குழந்தை நன்றாக இருக்கிறதா என்பதே அவர்களின் கவலை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil