AIADMK MP Thambidurai University Issue : அதிமுக எம்பியும் முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் பல்கலைகழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, அனைத்து நிலங்களையும் சர்வே மேற்கொண்டு 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்து உள்ள கோனாம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களது கிராமத்தில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தங்களது கிராமத்தில், பாதாள சாக்கடை வசதியோ, எவ்வித அரசு அலுவலக கட்டிடமோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிதுரையின் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைகழகம் ஆகியவை கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, மின்சார துணைமின் நிலையம், தனியார் பாதை, மாணவ, மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை கட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு்ளளது.
ஆனால் கிராமத்தின் அருகில் உள்ள ஆவடி நகராட்சி உயர்நிலை பள்ளி 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் இந்த பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், தம்பிதுரையின் பல்கலைகழகம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் இது தொடர்பாக தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தம்பிதுரையின் பல்கலைகழகம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சர்வே செய்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil