பிரபல கல்வியாளரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி.வசந்தி தேவி, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
1938-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பிறந்த வசந்தி தேவி, கல்வியாளராக மட்டுமல்லாமல், தமிழகத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரு தீப்பறவையாகவும் அவர் திகழ்ந்தார். கடந்த 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 2-வது துணைவேந்தராகப் பதவி வகித்த அவர், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அவர், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, அவர் மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது ஓய்வுக்குப் பிறகும், ஆசிரியர் உரிமைகள், கல்வி முறையின் சிக்கல்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் தனது கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்தி வந்த வசந்தி தேவி, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணியின் பொது வேட்பாளராக போட்டியிட்டார். தலித் மக்களின் உரிமைகள், பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து குரல் கொடுத்தவர் வசந்தி தேவி.
அவரது மறைக்கு, அரசியல் பிரபலங்கள், கல்வியாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.