தி.மு.க முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருவளர்சோலை அருகே காவிரி கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தமிழகத்தில் பிரபல குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 13 பேரை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுது்து இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரபல குற்றங்களில் ஈடுபட்டவர்களான மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணை தொடங்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.
எனவே, இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி சிவக்குமார் முறையான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன் பின்னர் "பாலிகிராஃப்'' உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதியளித்தார். இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் (எ) சண்முகம் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றபோதும் மற்றவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உடன்பட்டனர்.
அதன்படி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், கலைவாணன், செந்தில், திலீப், சுரேந்தர், சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 12 பேரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 18ந் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/SSpPWrcepAqdxIcfss8N.jpg)
சோதனையின்போது ராமஜெயம் கொலை சம்பந்தமாக மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும். வேறு வழக்குகள் பற்றிய கேள்விகள் கேட்கக் கூடாது. சோதனையின்போது வழக்கறிஞர்கள் உடனிருக்கவும் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தனர். அதேபோன்றே கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டது. கேள்விகள் கேட்கும்போது அவர்களின் பதிலில் உண்மை உள்ளதா என்பதை அவர்களின் இருதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளின் அளவீடுகளை வைத்து கணக்கிடப்பட்டு, சோதனைக்குப் பிறகு அறிக்கையும் நீதிபதி சிவக்குமார் வசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் படுகொலை செய்யப்பட்ட ராமஜெயம் வழக்கு மீண்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனையோ கொலைக்கான காரணங்களையும், குற்றவாளிகளையும் துப்பு துலக்கி கண்டுபிடித்துள்ள தமிழ்நாடு காவல்துறையால் அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் விஐபியுமான ராமஜெயம் கொலை வழக்கில் மட்டும் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கான மர்மம் இதுவரை யாராலும் விளங்க முடியாத புதிராகவே இருக்கிறது.
இதனிடையே இன்று ராமஜெயத்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் கே.என்.அருண் நேரு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பிராட்டியூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“