Advertisment

நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து: 44 பயணிகளுடன் பயணத்தை தொடங்கிய ''சிவகங்கை''!

சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன.

author-image
WebDesk
New Update
Sivagangai Shiop

சிவகங்கை கப்பல்

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் இலங்கை காங்கேசன் துறைமுகம் நோக்கி புறப்பட்டது. நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடைந்தது.

மறுமார்க்கமாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடையும். பின்னர், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதாரண இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரம் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Srilanka Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment