தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் பயிற்சி மையங்கள்:
மருத்துவ படிப்பு படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர் ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அடுத்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முன்னர் வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது என்ற உறுதிபடத் தெரிவித்தார்.