/tamil-ie/media/media_files/uploads/2021/06/Tamilnad.jpg)
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல்நாள் ஆளுநர் உரை முடிந்த நிலையில் தற்போது 3-வது நாளாக கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய கூட்டத்தில் மத்திய அரசை திமுக ஒன்றிய அரசு என அழைப்பது ஏன் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஒன்றிய அரசு என்று சொல்வதை சிலர் குற்றம் போல பார்க்கிறார்கள். அது குற்றம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாச்சி தத்துவம் அடங்கி உள்ளது.
1957ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றியம் என்ற வார்த்தை இருந்தது. அண்ணா, கருணாநிதி என பலரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். மாநிலங்கள் அனைத்தும் இணைத்து உருவான ஒன்றியம்தான் இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் இதுதான் உள்ளது. மத்திய அரசு இனி ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம். இனி பேட்டிகளில், அறிக்கைகளில் இந்த வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவோம். இனி எப்போதுமே ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீடிக்க மசோதா தாக்கல் :
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அன்றில் இருந்து அவர்களது பதவிக்காலம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கும் சட்ட மசோதாக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்கின்றனர்.
திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க கோரிக்கை :
சட்டசபை கூட்டத்தில் பேசிய திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், ''மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பினார். சென்னையில் தற்போது உள்ள இட நெருக்கடியை குறைக்கும் நடவடிக்கையாக தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு குறைந்த மணிநேர பணயத்தில் சாலை மார்க்கத்திலும், ரெயில் மற்றும் விமானம் மூலம் வந்து செல்ல முடியும் எனவும் என அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரம் :
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக எதிர்கட்சி தரப்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக நிதியமைச்சர், பி.டி.ஆர் பழனிவேல் கூறுகையில், தற்போதுள்ள நிதிநிலையில் இப்போதைக்கு பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. நிதிநிலை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக உள்ளது. நிதி நிலை சீரான பின் நிச்சயமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் 2011-ல் ரூ.9.48 பைசாவாக இருந்த பெட்ரோல் வரி, 2014-ல் ரூ.21.48 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதில் 4 ரூபாயை மட்டும் மாநிலத்துக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள பைசாவை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோலில் கிடைக்கும் வரியில் 5 தற்போது 31 ரூபாய் வரை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது எனவும் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் :
தமிழகத்தில் நீட் தேர்வு தடை செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், இது குறித்து சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு நீட் விதி விலக்கு கேட்கும்போது பாஜக ஆதரவு அளிக்க தயாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் தற்போதுள்ள அதிமுக அரசு நீட் விதி விலக்குக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக பாஜக இதற்கு ஆதரவு அளிக்குமா என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விவகாரம் :
வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடாபாக பாமக தலைவர் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள முதல்வர், தமிழகத்தீல் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வெலை வாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5% உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று ஜிகே.மணி தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தற்போது உறுதி அளிப்பதாக கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.