தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
Advertisment
கொரோனா காலகட்டம் என்பதால், ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்துப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதிய ஆளுநருக்கும், அவரது மனைவிக்கும் புத்தகம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆளுநருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார். இவ்விழாவில், தலைமைச் செயலர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதே போல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால், ஒன்றிய அமைச்சர் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆர்.என். ரவிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.என்.ரவி, வணக்கம் என தமிழில் கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.
அப்போது அவர், " பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராகப் பொறுப்பேற்றதற்குப் பெருமைப்படுகிறேன். பழமையான தமிழ்மொழியைக் கற்க விரும்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. ஆளுநர் பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.