திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், அதேபோல் திருச்சி ராஜா காலனி தாட்கோ அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தினையும் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க பள்ளிகளையும், விடுதிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக விடுதிகள் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த நிதியாண்டிற்காக திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 100 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான புதிய விடுதி கட்டடங்கள் கட்ட தமிழ்நாடு அரசு அறிவித்ததை தொடர்ந்து, அதற்கானப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
ஏற்கனவே, 3 மாவட்டங்களை ஆய்வு செய்து தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், பஞ்சப்பூரில் 350 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒரு விடுதியும் மற்றும் ராஜாகாலனியில் சுமார் 250 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மற்றொரு விடுதியும் என 34 கோடி மதிப்பீட்டில் 2 விடுதிகள் கட்டப்படவுள்ளது. அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் பாதுகாப்பான வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய இன்று வந்துள்ளேன்.
விரைவில் பணிகள் தொடங்குவதற்கு அலுலவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். எனவே, இப்பணிகள் தொடங்கி 1 வருட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மிருணாளினி, தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா, பழங்குடியினர் நல அலுவலர் கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“