தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் 6-வது முறையாக ஆட்சி அமைக்கும் திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட நிலையில், இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து வரும் 7-ந் தேதி காலை 9- மணிக்கு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் அரியணையில் அமரும் ஸ்டாலின் முதலில் எந்த திட்டத்திற்கு கையெழுத்திடுவார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் அறிவித்த இல்லத்தரசிகள், மற்றும் பெண்களை மகிழ்விக்கும் திட்டங்களுக்கு தான் அவர் முதலில் கையெழுத்திடுவார் அண்ணா அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் திட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் நின்று சிறப்பான ஆட்சியைத் தரப்போவதாக கூறிய ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், உள்ளிட்ட அம்சங்களின் தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், ரேஷன் கடைகளில் ஜூன் மூன்றாம் தேதி 4000 ரூபாய் உதவித்தொகை, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி என்று ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். அதில் முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அல்லது அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி திட்டத்திற்கு கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil