பிஇ: அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்
தமிழகத்தில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேருபவர்களின் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தடுப்பூசி – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
வாராந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பாக். சுற்றுப்பயணம் ரத்து – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,647 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,619 பேர் குணமடைந்தனர். மேலும், கொரோனா பாதிப்பால் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பாஜகவுக்கு ஒதுக்க சம்மதம் தெரிவித்த நிலையில், புதுச்சேரி பாஜக பொருளாளராக உள்ள செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக பொருளாளராக உள்ள
செல்வகணபதி நாளை வேட்புமனு தாக்கல்
செய்கிறார்.
பெங்களூரு பன்னார்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 2வது மாடியில் பால்கனியில் நெருப்பில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், அதே வீட்டிற்குள் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்விற்கு எதிராக நிச்சயம் போராடி வெற்றி பெறுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது மிக அவசியமானது. வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து செய்திட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி சீட்டை பாஜகவுக்கு ஒதுக்க, என்.ஆர்.காங்கிரஸ் சம்மதம் தெரிவித்த நிலையில், பாஜக மாநில பொருளாளர் செல்வ கணபதி வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பறக்கும் படையில் ஒரு நீதிபதி, இரண்டு அல்லது மூன்று காவலர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் உதம்பூரில் பத்னிதோப் பகுதியருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் ரோஹித்குமார், அனூஜ் ராஜ்புத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் கனிமொழி சோமு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த பிறகு அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார்
கடலூர் பூதம்கட்டி கம்பளி மேடு அங்கன்வாடியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட, 17 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடலூர் ஆட்சியர் மருத்துவமனையில் குழந்தைகள் உடல்நிலை குறித்து விசாரித்தார். அங்கன்வாடி பணியாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. வயதானவர்களுக்கு பொருட்கள் மறுக்கப்படுவதாக வந்த புகார்களையடுத்து உணவு வழங்கல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கொடநாடு கொலை வழக்கின் கூடுதல் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரளாவை சார்ந்த சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமிக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களை உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
கோயில்களில் தமிழில் அர்ச்சன செய்வதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என்றுகூறி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் மத்திய பிரதேச எம்.பி.யாக தேர்வாகிறார் எல்.முருகன்.
திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ரூ.1,597.59 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 34,469 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.34,992 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை துவங்கியது. தினேஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து தந்தை போஜனிடம் கெங்கரை கிராமத்தில் உதகை டிஎஸ்பி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் மத்திய பிரதேச எம்.பி.யாக தேர்வாகிறார்.