Ex- transport minister MR Vijayabhaskar Tamil News: கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் 2016- 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கி குவித்ததாகவும், அவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகவும் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகம் என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய், 25.5 லட்சம், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து அவரை விசாரிக்கக் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கிண்டியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் பணியைக் காரணம் காட்டி அவர் விலக்கு கேட்டிருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருகிற 25ம் தேதி கிண்டி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சிக்கும் மாஜி அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக வலம் வந்த வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர்.
மேலும், நேற்று முன்தினம் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.