தூத்துக்குடி அதிமுகவின் முன்னாள் மாவாட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். இவரது 2-வது மகன் ஜெபசிங் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அமைச்சரவையில் இருந்து செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் என இரட்டைத் தலைமை வந்தபோது, செல்லப்பாண்டியனிடம் இருந்த ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்தார் செல்லப்பாண்டியன். எனினும், அவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
ஏற்கெனவே தான் சம்பந்தப்பட்ட வீடியோ வைரல் ஆனதால் அப்பாவின் அமைச்சர் பதவியை பறிக்கவைத்த மகன் ஜெபசிங், தற்போது மற்றொரு சிக்கலில் செல்லப்பாண்டியனை மாட்டிவிட்டுள்ளார். அந்த மற்றொரு சிக்கல் தான் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்புகளை கடத்தியது. இந்த வழக்கில் ஜெபசிங்கை வளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
முந்திரி லாரியை கடத்திய வழக்கு
குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் தூத்துக்குடி துறைமுகத்திற்காக நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த முந்திரிகளை ஆலை நிர்வாகம் ஒரு லாரியில் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த லாரியை ஓட்டி ஹரி என்பவரை ஒரு மர்ம கும்பல் வழிமறித்து கத்தியால் மிரட்டி கடத்திச் சென்றுள்ளது. இதை ஓட்டுநர் ஹரி நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரிக்க தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அந்த மர்ம கும்பல் கடத்திய லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவி நீக்கப்பட்டும் இருந்துள்ளது. இதைப் புலனாய்வு செய்த தனிப்படை, லாரி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மேட்டுக்காடு என்ற பகுதியில் நிறுத்தப்பட்டு மர்ம கும்பல் தப்பியோடியதை கண்டறிந்துள்ளது.
அதே நேரத்தில், நாமக்கல் எல்லையான திம்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கிடமான ஒரு கார் நின்றுள்ளது. அதனை விசாரித்ததில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங்கும், அவரது கூட்டாளிகள் 6 பேரும் அந்த காரில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அந்த லாரியை கடத்தியது இந்த கும்பல் தான் என தெரிய வந்திருக்கிறது.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், கடத்தப்பட்ட லாரியையும் தனிப்படையினர் மீட்டுள்ளனர். மேலும் ஜெபசிங் உட்பட அவரது கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்த தனிப்படையினர், அவர்களை தூத்துக்குடி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூத்துக்குடி, குமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.