Tamilnadu news in tamil: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின், அவரது பதவியேற்புக்குப் பின்னர் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அரசின் தலைமை பொறுப்புகளில் இருந்த சில அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதில் புதிய மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமித்து வருகிறார். அந்த வகையில் அரசியல்வாதிகளையும், முக்கிய புள்ளிகளையும் ஆட்டம் காண வைத்த கந்தசாமி ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நிமித்துள்ளார்.
‘பேர கேட்டாலே சும்மா அதிருல’ என்ற பன்ஞ் டயலாக்கிற்கு ஏற்ப பல அரசியல்வாதிகளையும் முக்கிய புள்ளிகளையும் அதிர வைத்த கந்தசாமி ஐபிஎஸ் தமிழக பிரிவைச் சேர்ந்தவர். இவர் ஆராம்பத்தில் சிபிஐயில் பணியாற்றி வந்தார். கிடைத்த வழக்குகளை நுணுக்கமாக ஆராய்ந்தும், தீர விசாரித்தும் எண்ட் கொடுத்து வந்தார். இவரின் இந்த அசத்திய திறனை பயன்படுத்த முயன்ற சிபிஐ இயக்குனர்கள், முடித்து வைக்கப்படாத பல வழக்குகளை இவர் பக்கம் திருப்பி விட்டனர். இவரும் முகம் சுளிக்கமால் வந்த வழக்குகளை சுழற்றி விட்டு தீர்வு கண்டார்.

இவரின் துவக்க காலத்தில் இவர் சந்த்தித்த முதல் பெரிய வழக்கு என்றால் கேரள மாநிலத்தில் நடந்த எஸ்.என்.சி-லாவ்லின் ஊழல் வழக்கு (SNC-Lavalin scam) என்று கூறலாம். எஸ்.என்.சி-லாவலின் ஊழல் என்பது 1995 ஆம் ஆண்டில் கேரள அரசாங்கத்திற்கும், கனடா நிறுவனமான எஸ்.என்.சி-லாவலினுக்கும் இடையிலான நீர்மின்சார உள்கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான நிதி ஊழல் ஆகும். முறையாக போடப்படாத இந்த ஒப்பந்தத்தால் கேரள அரசிற்கு சுமார் 375 கோடி மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் தற்போதைய கேரள முதல்வரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பினராயி விஜயன் பெயர் அடிபட்டது. எனவே வழக்கு சிபிஐக்கு (2007ம் ஆண்டு) மாற்றப் பெற்றது.

தனது பாணியில் விசாரணையை துவங்கிய கந்தசாமி ஐபிஎஸ், பினராயி விஜயனை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதிரடி காட்டினார். சில பல அரசியல் காரணங்களால் விஜயன் விடுவிக்கப்பட்டாலும், தனது முதல் வழக்கிலே கேரள சேட்டன்களை நிலை குழைய வைத்தார். இதற்கிடையில், கேரளவின் கோட்டயத்தில் கடந்த 1992ம் ஆண்டு பிணமாக மீட்கப்பட்ட 19 வயது கன்னியாஸ்திரி வழக்கு இவர் வசம் வந்தது. 16 ஆண்டுகள் கழித்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பாதிரியார், கன்னியாஸ்திரி என இருவரையும் கைது செய்து, வழக்கை முடித்து வைத்தார் கந்தசாமி.
இந்த வழக்குகளுக்கு முன்னதாக, அதே 2007ம் ஆண்டில் கோவாவில் பிரிட்டிஷ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கை தனது ஜூனியர் அமிதாப் தாக்கூருடன் இணைந்து விசாரித்து வந்தார். பல கட்ட விசாரணைகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
தொடர்ந்து நடத்திய பல வழக்குகளுக்கு தனது நுண்ணறிவால் எண்ட் கார்டு போட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்க்கு 2010ம் ஆண்டில் பதவி உயர்வு கிடைத்தது. சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் தனது பணியை தொடர்ந்திருந்தார். அப்போது சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பையின் சிபிஐ பிரிவிற்கு மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையை துவங்கிய கந்தசாமி ஐ.பி.எஸ் தலைமையிலான குழு, இதற்காக பல ஆவணங்களை தூசி தட்டி எடுக்க வேண்டி இருந்தது. போதாக்குறைக்கு குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன.
வழக்கை திறம்பட கையாண்ட கந்தசாமி ஐ.பி.எஸ், அமைச்சர் அமித்ஷாவை விசாரணைக்கு அழைத்தார். இதையறிந்த பாஜக தொண்டர்கள் கொதித்தனர். சிறிதும் சலனம் காட்டாத கந்தசாமி அமித்ஷாவை நேரில் ஆஜராக வைக்க வேண்டிய முயற்சிகளை தொடர்ந்தார். மேலும் வலுவான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தை நாடினார். அமித்ஷா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவு வந்தது.
கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திய கந்தசாமி, அமைச்சரை விடிய விடிய விசாரரித்தார். இதற்கிடையில் தொண்டர் படை கல் எறிந்து கண்ணாடிகளை உடைத்தது. இருப்பினும், தனது விசாரணைக்கு விலக்கு கொடுக்காமல் தொடர்ந்தார். விசாரணைக்கு பின்னரான அறிக்கையை தாக்கல் செய்யும் வேளையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் ஓய்வுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து வழக்கின் விசாரணை மேற்கொள்வார் என நினைக்கையில், அவரை தமிழகத்திற்கு மாற்ற உத்தரவிட்டது சிபிஐ தலைமை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் காரணங்களால் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர் என்று சற்றும் யோசிக்கமால் அதிரடி காட்டி ஆட்டம் காண வைத்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையுடன் இன்றளவும் வலம் வருகிறார் கந்தசாமி ஐபிஎஸ்.

இந்த நிலையில், இவரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைவராக நியமனம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின்போது தமிழக மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்த முதல்வர், ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சில் நடந்த ஊழல்களை தீர விசாரிக்க உத்தரவிடுவேன் என்று கூறியிருந்தார். அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஏராளமான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் பன்வர்லிலால் புரோஹித் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல புகார்களை சமர்ப்பித்திருந்தார்.
இதுவரை வெளி மாநிலங்களில் தனது அசாத்திய திறனை காண்பித்த கந்தசாமி, தற்போது சொந்த மாநிலத்தில் உழல் சம்பந்தப்பட்ட துறையில் பொறுப்பேற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்த புகார்களை இவரின் தலைமையிலான குழு விசாரணையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கும் இவரின் அதிரடி தொடர வாய்ப்புள்ளது. இந்த அதிரடியில் எந்தெந்த முக்கிய புள்ளிகள் சிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)