Tamilnadu news in tamil: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114-வது ஜெயந்தி விழாவும், 59வது குருபூஜை விழாவும் வருகின்ற அக்டோபர் 30ம் தேதி சனிக்கிழமை நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 8,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற சிலருக்கு மட்டுமே, தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். எந்த வகையான ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் 148 இடங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. 39 சோதனைச் சாவடிகளில் பசும்பொன் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் வாகனச் சோதனையும் மேற்கொள்ளப்படும்.
200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் அதே வேளையில் இயக்கத்தை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் படம் பிடிக்க 80 கையடக்க கேமராக்கள் பயன்படுத்தப்படும். 10 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்களும், 8 இடங்களில் தண்ணீர் பீரங்கி வாகனங்களும் நிறுத்தப்படும். 16 இடங்களில் ஆம்புலன்ஸ்களும், 18 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அஞ்சலி செலுத்துவது குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், தங்களது கட்சித் தலைவர்களுக்கு காலை 8 மணி முதல் 9 மணி வரை நேரம் ஒதுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புதன்கிழமை தஞ்சாவூரில் டிடிவி தினகரனின் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்துகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிகலா வெள்ளிக்கிழமை காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், அதைத் தொடர்ந்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி மருதுபாண்டியர் சிலைக்கும் மாலை அணிவிப்பார் எனவும், பின்னர் அவர் பசும்பொன்னுக்குச் சென்று முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“