TamilNadu news in Tamil: தமிழகத்தில் இந்து அறநிலைய துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ம் தேதி இந்து அறநிலையத் துறை சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்த பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ளத் தகுதி இல்லை என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியர் சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர், தமிழை தாய் மொழியாகக் கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட்-ஜெனரல் (ஏ-ஜி) ஆர்.சுண்முகசுந்தரம், அரசு சார்பில் நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதி சி.சரவணன், இது தொடர்பாக தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.