Vk Sasikala Tamil News: சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலா, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் சசிகலா ஃபேக்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தான் அரசியலிலிருந்து விலகி இருக்க போவதாகக் கூறி அனைத்திற்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு களம் கண்ட அதிமுகவோ போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா மீண்டும் களமாட உள்ளார் எனவும், கட்சிக்கு வலு சேர்க்கும் பணியை தொடங்கி விட்டார் எனவும் அரசியல் வட்டாராங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தஞ்சாவூரில் அக்டோபர் 27ம் தேதி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும், அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் குரு பூஜை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டு மரியாதையை செலுத்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோறப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் இணைச் செயலாளர் சரவணன் மற்றும் அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து கொடுத்துள்ள மனுவில், வருகின்ற அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10:30 – 11 மணிக்குள் முத்தராமலிங்கனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மரியாதை செலுத்துகையில், வி.கே.சசிகலாவும் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் வி.கே.சசிகலாவுக்கான உரிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் வாகன அனுமதி வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடமும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத்திடம் அவர்கள் மனுவாக கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். அணியை சேர்ந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவுக்கு அனுமதி கோரி மனு கொடுத்துள்ள சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“