தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் திங்கள்கிழமை ஒரே நாளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 418 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு எப்போது? -அமைச்சர் விளக்கம்
தற்போதைய சூழலில் பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை என்றும் ஏற்கனவே இருப்பது போன்று இணையவழி, 'வாட்ஸ் ஆப்' மூலம் வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
டெல்டா வைரஸ் உருமாற்றம்
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவவில்ல என்றும் இப்போதைக்கு இதனால் ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகிறது மத்திய அரசு
3ஆவது அலையால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு முழுவதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை இரண்டு அல்லது 3 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதிக திறனுள்ள தடுப்பூசி 'நோவாவாக்ஸ்' அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தயாரிக்க 'சீரம்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த 'நோவாவாக்ஸ்' நிறுவனம் தங்களின் தடுப்பூசி 90.4 சதவீத செயல்திறன் உள்ளதாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
- 20:05 (IST) 15 Jun 2021காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 22ஆம் தேதி கூடுவதாக தகவல்
காவிரியில் இருந்து தமிழகத்தில் உரிய தண்ணீர் திறப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 22ஆம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 20:02 (IST) 15 Jun 2021அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கைஆராய குழு அமைப்பு
தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 20:01 (IST) 15 Jun 2021கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்து இயக்க முடிவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 19:59 (IST) 15 Jun 2021தமிழத்தில் இன்று ஒரே நாளில், 11805 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில், 11805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2378298 பேராக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 267 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 30068 ஆக உயர்ந்துள்ளது.
- 18:49 (IST) 15 Jun 2021கொரோனா 3-வது அலையை சமாளிக்க தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 18:32 (IST) 15 Jun 2021நம்பிய பலரும் முதுகில் குத்திவிட்டார்கள் - விகே சசிகலா
ஒபிஎஸ் அவராகத்தான் முதல்வர் பதவியில் இருந்து சென்றார் என்றும் இல்லை என்றால் அவரையே முதல்வராக ஆக்கியிருப்பேன் என்றும் தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. தேனியை சேர்ந்த சிவனேசன் என்பவருடன் அவர் தான் நம்பிய பலரும் முதுகில் குத்திவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
- 17:23 (IST) 15 Jun 2021கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
- 16:20 (IST) 15 Jun 2021புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வி, வேலைவாய்பு, சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்ய வேண்டும். அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க செய்வதோடு போலி அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக டஹ்ரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்தாண்டு காலத்தில் 7 இலக்குகளை எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்று அறிவுரை வழங்கினார்.
- 16:03 (IST) 15 Jun 2021சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்படும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியைகளும் சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்கள்.
- 14:46 (IST) 15 Jun 202150 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 21ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்துள்ள அரசு, உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ளது. என்றாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உணவகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்கள் காணப்பட்டனர்.
- 13:23 (IST) 15 Jun 2021இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அறிவிப்பு
அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை நியமித்து பி.சி.சி.ஐ. தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். 3 20 ஓவர்கள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் ஷிகர் தவான் தலைமையில் நடைபெற உள்ளது.
- 13:02 (IST) 15 Jun 2021Weather report
நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 13:00 (IST) 15 Jun 2021கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள் தயாராக இருக்க வேண்டும்
கொரோனா மூன்றாம் அலை தமிழகத்தில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என வல்லுநர்கள் கூறியுள்ளனர். கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா 3வது அலையில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்று தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 12:31 (IST) 15 Jun 2021பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்
யூடியூபில் ஆபசமாக பேசி வீடியோ வெளியிட்ட பப்ஜி மதன் என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் அவர் மீது ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- 12:28 (IST) 15 Jun 2021நீலகிரியில் நேற்று இரவு முதல் கனமழை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரியில் நேற்று இரவு முதல் கூடலூர், பந்தலூர், தேவலா, மசினக்குடி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதோடு கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
- 12:25 (IST) 15 Jun 2021புதுவை சபாநாயகர் தேர்வு
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 12:10 (IST) 15 Jun 2021மூன்றாவது அலை என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்
மூன்றாவது அலை என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல். ஒருவேளை மீண்டும் பாதிப்பை சந்திக்கும் பட்சத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் படிப்பினை மூன்றாவது அலையை தடுக்க உதவும். எந்த வைரஸாக இருந்தாலும் முறையாக சிகிச்சை அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
- 12:02 (IST) 15 Jun 2021மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து பாமக போராட்டம்
தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- 11:34 (IST) 15 Jun 2021ரூ. 165 கோடிக்கு மது விற்பனை
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தனி நபர் இடைவெளி பின்பற்றப்பட்டு டாஸ்மாக் கடைகள் நேற்று இயங்க துவங்கின. நேற்று ஒரே நாளில் 27 மாவட்டங்களில் ரூ. 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
- 11:27 (IST) 15 Jun 2021பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை ஜூன் 17ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார். ஜூன் 18ஆம் தேதி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
- 11:06 (IST) 15 Jun 2021நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதிக்கான காசோலையை விஜய் சேதுபதி வழங்கினார்.
- 11:03 (IST) 15 Jun 2021நெம்மேலியில் ஸ்டாலின் இன்று ஆய்வு
சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
- 11:01 (IST) 15 Jun 2021முதல்வருடன் விக்கிரமராஜா சந்திப்பு
சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்தார். துணிக்கடைகள், நகைக் கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
- 10:58 (IST) 15 Jun 2021மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம் தேவையில்லை
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்திற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
- 10:11 (IST) 15 Jun 2021சிபிஎஸ்இ 12 வகுப்பு மதிப்பெண் வழங்குவது எப்படி?
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 மதிப்பெண்களையும் சேர்த்து வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும், மதிப்பெண் முறையை அளவீடு செய்ய அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.
- 10:07 (IST) 15 Jun 2021மேட்டூர் நீர் முக்கொம்பு வந்தடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்புக்கு இன்று காலை வந்தடைந்தது. 10ஆயிரம் கனஅடி நீர் வந்ததால் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
- 10:02 (IST) 15 Jun 20212வது தவணையாக ரூ.2000 விநியோகம்
தமிழக ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தின் 2வது தவணையாக ரூ.2000 விநியோகம் தொடங்கியது.
அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- 09:25 (IST) 15 Jun 2021குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 60, 471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,726 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,17,525 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 08:48 (IST) 15 Jun 2021சிவசங்கர் பாபா மீதான புகார் - டேராடூன் விரைந்த தனிப்படை
பாலியல் புகார் குறித்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.