/indian-express-tamil/media/media_files/2025/03/14/wY2Gm2r6fuGyQPloffJk.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கம் விலை இன்றும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
-
Apr 12, 2025 22:17 IST
நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 22:16 IST
2026-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அகற்றப்படும்: அண்ணாமலை நம்பிக்கை
மாநில தலைவர் சொல்லை கேட்பது எங்கள் கடமை. மாநில தலைவரின் கட்டளையை ஏற்று அவர் வாங்கிக்கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 22:13 IST
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றலாக இருப்பேன். அதிமுகவில் இருந்து பாஜக வந்த உடன் எனக்கு பெரிய அளவிலான பொறுப்பு வழங்கவில்லையே என்கிற கோபம் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது கூட இருந்தது. தற்போது இல்லை எனபாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
-
Apr 12, 2025 22:12 IST
ஆயுர்வேத மருத்துவமனையில் ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவையில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்
-
Apr 12, 2025 22:11 IST
பாஜகவின் கோபுரத்தில் கலசம் வைத்தவர் அண்ணாமலை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் ஒவ்வொரு படியாக கட்டப்பட்ட பாஜக கோபுரத்தின் மீது கலசம் வைத்தவர் அண்ணாமலை. அந்த கலசம் மீது 2026 சட்டமன்றத் தேர்தலில் குடமுழுக்கு நடத்தப் போகிறோம். தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
-
Apr 12, 2025 20:48 IST
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: ஆளுநர் ரவி கடும் கண்டனம்
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம் செய்துள்ள நிலையில், உயர் பதவியில் உள்ள ஒருவர் பெண்களை எவ்வளவு தரக்குறைவாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது சிவனையும், விஷ்ணுவையும் வழிபடும் அனைவரின் நம்பிக்கையை காலில் போட்டு மிதித்துள்ளார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 20:47 IST
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு என்பது ஏதோ ஒரு மாநிலம் அல்ல, இந்தியாவின் ஒரு அங்கம், அதனால் தான் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் திருவள்ளூவரையும்,
தமிழையும் மையப்படுத்தி பேசுகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். -
Apr 12, 2025 19:55 IST
அண்ணாமலை இன்றே காலணி அணிந்துகொள்ளலாம்: நயினார் நாகேந்திரன்
முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வேண்டுகோள் வைத்துள்ள தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இனி காலில் செருப்பு அணிய வேண்டும். 2026-ல் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. அண்ணாமலை இன்றே காலணி அணிந்துகொள்ளலாம். ஆட்சி மாற்றத்திற்கு அமித்ஷா நேற்றே அடிக்கல்நாட்டிவிட்டார் என்று கூறினார். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று கூறியிருந்த அண்ணாமலை நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று செருப்பு அணிந்துகொண்டார்.
-
Apr 12, 2025 19:31 IST
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி முதல்வருக்கு பேரிடி: இ.பி.எஸ் கருத்து
பாஜக பூச்சாண்டி காட்டியே, 4 ஆண்டுகள் தமிழகத்தை வஞ்சித்த மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்? பாஜக - அதிமுக கூட்டணி முதல்வருக்கு பேரிடியாக இறங்கியிருப்பது, அவரின் அறிக்கையில் தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த கொள்ளை கும்பலுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 19:09 IST
என்னைவிட தகுதியான திறமையானவர்கள் மேடையிலேயே உள்ளனர்: அண்ணாமலை
பாஜக மாநில தலைவராக நான் பொறுப்பேற்கும் போது யாருக்கும் என்னைத் தெரியாது. என்னைவிட தகுதியான திறமையானவர்கள் மேடையிலேயே உள்ளனர். என்னைவிட எல்லாவிதத்திலும் மேலே உள்ளவர்கள் என்னிடம் முகம் சுழிக்காமல் மாநில தலைவர் பொறுப்பை எனக்கு அளித்தனர். பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் அளவுக்கு எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 18:22 IST
தேசிய பொதுக்குழு உறுப்பினரானார் அண்ணாமலை
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 12, 2025 17:54 IST
பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ.க தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னை, வானகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
Apr 12, 2025 17:04 IST
நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு
பா.ஜ.க மாநில தலைவராக இன்று பொறுப்பேற்கும் நயினார் நாகேந்திரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கான விழா சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது.
-
Apr 12, 2025 16:30 IST
போலி முதலீட்டு வலைதளங்கள் - சைபர் க்ரைம் எச்சரிக்கை
பிரபலங்களின் படங்களை வெளியிட்டு மோசடி செய்யும் முதலீட்டு வலைதளங்கள், போலி சைபர் க்ரைம் தளங்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி ஆகியோர் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. குடியரசு தலைவரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்வதாகவும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Apr 12, 2025 16:05 IST
மன்னிப்பு கோரிய அமைச்சர் பொன்முடி
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். அதன்படி, "நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இது போன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்தினேன். பலருடைய மனதை புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது. நான் மிகவும் மனம் வருந்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 12, 2025 15:26 IST
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து திருமாவளவன் விமர்சனம்
பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க தொண்டர்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியின் தலைமை யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 12, 2025 15:11 IST
வக்பு மசோதா எதிர்ப்பு - நாம் தமிழர் நாளை ஆர்பாட்டம்
வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 14:46 IST
இனி நான் அடிப்பதெல்லாம் சிக்ஸராகவே இருக்கும் - அண்ணாமலை பேச்சு
"இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும்; பேச முடியும். அரசியலில் அடித்து ஆட வேண்டும் இனி நான் அடிப்பதெல்லாம் சிக்ஸராகவே இருக்கும். தடுப்பாட்டங்களை நயினார் நாகேந்திரன் பார்த்துக் கொள்வார். அவர் பக்குவமாக பேசுவார்" என்று நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசியுள்ளார்.
-
Apr 12, 2025 14:42 IST
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது - பிரேமலதா விஜயகாந்த்
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து எடுத்த முடிவு. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் நிதானமாக யோசித்து தான் முடிவு எடுப்போம். 6 மாதம் தே.மு.தி.க வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த உள்ளோம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க, பா.ஜ.க எங்களிடம் பேசவில்லை
எந்த கூட்டணிக்கு செல்வது என்பது குறித்து தே.மு.தி.க இன்னும் முடிவு எடுக்கவில்லை. தொலைகாட்சியில் பார்த்து அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து தெரிந்துகொண்டேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 14:41 IST
யு.பி.ஐ சேவை பாதிப்பு
தொழில்நுட்ப கோளாறால் யுபிஐ பரிவர்த்தனை சேவை பாதிப்பு, விரைந்து சரிசெய்யப்பட்டு வருகிறது என்று என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது.
-
Apr 12, 2025 14:25 IST
அமைச்சர் பொன்முடியின் பேச்சு மிகவும் கேவலமானது - பிரேமலதா விஜயகாந்த்
"அமைச்சர் பொன்முடியின் பேச்சு மிகவும் கேவலமானது. முதல்வர் உறுதியான முடிவு எடுத்து பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளுக்குள் சிக்கல் நிலவுகிறது. தே.மு.தி.க மட்டும் உறுதியாக தெளிவுடன் செயல்பட்டு வருகிறது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 14:22 IST
அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Apr 12, 2025 14:21 IST
காதலியை சூட்கேசில் மறைத்த காதலன்
ஓ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் தன்னுடைய காதலியை சூட்கேசில் மறைத்து வைத்து ஆண்கள் தங்கிப் பயிலும் தன்னுடைய விடுதிக்கு கொண்டு செல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
Apr 12, 2025 14:20 IST
அமலாக்கத் துறைக்கு திமுக சட்டத்துறை கண்டனம்
"நகராட்சி நிர்வாகத் துறை பற்றி தவறான தகவலை அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக்கடன் வழக்கை எடுத்து ஆதாரமில்லாத குற்றம்சாட்டு. வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பி கட்டிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சட்டவிரோதமானது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஆதாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசின் கைப்பாவையாக இருந்து அமலாக்கத் துறை அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது அழகல்ல" என்று அமலாக்கத் துறைக்கு தி.மு.க சட்டத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Apr 12, 2025 14:06 IST
ஸ்டாலின் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும் பொன்முடியையும் தான் - நயினார் நாகேந்திரன்
"முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும் பொன்முடியையும் தான். என்டிஏ கூட்டணியை அல்ல" என்று தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 13:44 IST
‘‘பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் அறிக்கை’’ - இ.பி.எஸ் கடும் தாக்கு
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியைக் கண்டு பீதியின் உச்சத்தில் முக ஸ்டாலின் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; முக ஸ்டாலின் தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்து இருந்தார். "என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்! தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
Apr 12, 2025 13:35 IST
ரயில் மோதி 17 பசுக்கள் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
கேரளாவில் வேகமாக வந்த ரயில் மோதி 17 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக மாடுகள் இறந்துள்ளன.
-
Apr 12, 2025 13:30 IST
அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி - கே.சி.பழனிசாமி விமர்சனம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972-ல் துவக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் திராவிட சித்தாந்தங்களில் பயணித்த அ.தி.மு.க.வை ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விடம் ஒப்படைத்துவிட்டார்.
இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்பது 1980லேயே காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வால் முயற்சிக்கப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.
அதேபோல ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக்கப்பட வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்த கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அ.தி.மு.க.வின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார். இன்றைய நாள் அ.தி.மு.க. வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.
"மோடியா? லேடியா?" என்று கேட்ட ஜெயலலிதாவின் ஆன்மா, "சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்" என்ற எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 13:14 IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டி.டி.வி. தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது என அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய கடல் போன்றது . தாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது" என தெரிவித்தார் .
-
Apr 12, 2025 13:02 IST
வக்பு சட்டத்துக்கு எதிரப்பு மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை
வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன் கல்வீச்சும் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை அடுத்து முர்ஷிதாபாத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
-
Apr 12, 2025 12:46 IST
தி.மு.க என்றால் வரலாறு - .ஸ்டாலின் பதிவு
தி.மு.க என்றால் வரலாறு என ஆளுநர் கையெழுத்திடாமல் மசோதாக்கள் சட்டமானது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், ஆளுநருக்கு மட்டுமல்லாது குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Apr 12, 2025 12:24 IST
ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார்கள் - அ.தி.மு.க மீது திருமா விமர்சனம்
"நெருக்கடி கொடுத்து அதிமுகவை கூட்டணிக்கு பணிய வைத்துள்ளது பாஜக என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “பாஜகவுடன் அதிமுக சேர்ந்ததற்கு பல்வேறு நெருக்கடிகளும் காரணம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுகவுக்கு பின்னடைவே ஏற்படும். பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
-
Apr 12, 2025 12:13 IST
இ.பி.எஸ் வாய் திறக்காதது ஏன்?: வைகோ கேள்வி
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், “அதிமுக – பாஜக கூட்டணி 4 மாதங்கள் வரைக்கு கூட நிலைக்குமா, நீடிக்குமா என தெரியாது. பாஜகவுக்கு எடுபிடி போல இருந்து கூட்டணி அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. செங்கோட்டையன் டெல்லி சென்று வந்ததும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி,” என்று தெரிவித்தார்.
-
Apr 12, 2025 11:12 IST
மதுரவாயல் பகுதியில் சீரான மின் விநியோகம்
சென்னை மதுரவாயல் பகுதியில் உயர் அழுத்த கேபிள் பழுது சரிசெய்யப்பட்டு, 8 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
-
Apr 12, 2025 11:07 IST
”கூட்டணியை உறுதி செய்ததே 'ஊழல்' தான்”
“அதிமுக உடன் கூட்டணி என்று அறிவித்த மேடையிலேயே ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக 2 முறை பதவி இழந்து, 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது ஊழல் என்பது பேசத் தகுதியான வார்த்தையா?”
-
Apr 12, 2025 11:06 IST
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி: ஸ்டாலின் விமர்சனம்
“நீட் தேர்வை, இந்தித் திணிப்பை, மும்மொழிக் கொள்கையை, வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அதிமுக. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அதிமுக. இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அதிமுகவை பேசவும் அனுமதிக்கவில்லை ”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Apr 12, 2025 10:55 IST
பொன்முடியை கண்டித்து 16-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழ் நாட்டினுடைய பண்பாட்டை, அரசியல் நாகரிகத்தை, மேடை நாகரிகத்தை அசிங்கப்படுத்தியும்; பெண்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகின்ற வகையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், 16.4.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 10:15 IST
த.வெ.க மாவட்ட செயலர்களுக்கு பயிற்சி
த.வெ.க மாவட்ட செயலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் நேற்று, மாவட்டச் செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 12, 2025 10:11 IST
5 முறை தொடர் தோல்விகளை சந்தித்த சி.எஸ்.கே
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 5 முறை தொடர் தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தழுவியுள்ளது. மேலும், தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 முறை தோல்வியை சந்தித்ததும் இதுவே முதல்முறையாகும். தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே. கேப்டன் தோனி கூறியவை; “கடந்த சில போட்டிகள் எதுவுமே எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தப் போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்களிடம் நல்ல தொடக்க வீரர்கள் உள்ளனர். ஸ்கோரை பார்த்து விரக்தி அடையாமல் இருப்பது மிகவும் முக்கியம். மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை என்றார்.
-
Apr 12, 2025 10:05 IST
ஐ.பி.எல். போட்டி - தீவிர கண்காணிப்பு
ஐ.பி.எல் போட்டிகளில் குற்றங்களை தடுக்க சென்னை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஏ.ஐ உதவியுடன் செயலி உருவாக்கி தீவிர கண்காணிப்பு ஈடுப்பட இருப்பதாகவும் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் கூறினார்.
-
Apr 12, 2025 10:03 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.70,160-க்கும் ஒரு கிராம் ரூ.8,770-க்கும் விற்பனையாகிறது.
-
Apr 12, 2025 09:45 IST
ஆளுநர் வழக்கில் தீர்ப்பு நகல் - தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணையின் படி தமிழ்நாடு பல்கலை.சட்டம் முன்வடிவுக்கு 2023 நவ.18 அன்று ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 12, 2025 09:24 IST
தட்கல் டிக்கெட் நேர மாற்றம் - ஐஆர்சிடிசி விளக்கம்
தட்கல் ரயில் டிக்கெட் நேர மாற்றம் குறித்து பரவும் செய்திகள் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெளிவுபடுத்தியுள்ளது.
-
Apr 12, 2025 09:10 IST
நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை வாழ்த்து
நயினார் நாகேந்திரன் தலைமை மற்றும் அனுபவத்தின் கீழ் பா.ஜ.க. வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 09:07 IST
ஈ.சி.ஆர் சாலை மூடல் - வாகன ஓட்டிகள் சிரமம்
ஈ.சி.ஆர் கானத்தூரில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால், கோவளம், மகாபலிபுரம் செல்லும் வாகனங்கள் அக்கரை சிக்னலில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
-
Apr 12, 2025 08:52 IST
வட மாநிலங்களில் கனமழை - 102 பேர் பலி
வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி, பீஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 102 பேர் உயிரிழந்துள்ளனர். பீஹாரில் 80 பேர், உ.பி.-யில் 22 பேர், பாட்னாவில் மட்டும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன. ஜார்க்கண்டில் மரங்கள் முறிந்து விழுந்தும், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயிகள் அவதிக்குள்ளாகியும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
Apr 12, 2025 08:18 IST
ஐ.பி.எல்: இன்று குஜராத் - லக்னோ அணிகள் மோதல்
இன்று நடைபெறும் ஐ.பி.எல். 26-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - லக்னோ அணிகள் மோதுகின்றன. லக்னோ ஏகானா மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Apr 12, 2025 08:16 IST
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சி.எஸ்.கே vs கே.கே.ஆர். போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்ததுடன், அவர்களிடம் இருந்த 11 டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
Apr 12, 2025 07:33 IST
3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 12, 2025 07:32 IST
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2026-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வழங்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம். ராஷ்டிரீய புரஸ்கார் வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பாராட்டு பத்திரமும் எழுதி, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 31-ந் தேதி என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.