News Highlights: சூரப்பா இன்னும் பதவியில் தொடர்வது ஏன்? ஸ்டாலின் கேள்வி

வடக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பலியாகினர்.

Latest Tamil News : தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்த பிறகு துணை வேந்தர் சூரப்பா பதவியில் தொடர்வது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டுவிட்ட பிறகும் அவர் பதவியில் தொடரும் மர்மம் என்ன? பேரமா? முதல்வரின் நாடகமா?  உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, ஆவணங்கள் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) கூட்டணிக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சட்டமன்றக் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது உட்பட அடுத்த அரசாங்க அமைப்பது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய உள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, நிதீஷ் குமார், என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக இன்று அறிவிக்கப்படுவார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,56,372 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பலியாகினர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி திருநாளை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வருட தீபாவளியை ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog

News In Tamil : தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!


21:29 (IST)15 Nov 2020

டாக்டர் ராமதாஸ் கருத்து

உலக அளவில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 6.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இரண்டாவது அலை தாக்கும் ஆபத்து அதிகம். எனவே தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  

20:35 (IST)15 Nov 2020

ஜோ பைடன் வெற்றி குறித்து ட்ரம்ப்

மோசமாக நடத்தப்பட்ட தேர்தல் காரணமாக ஜோ பைடன் வென்றார் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். மற்றொரு ட்வீட் பதிவில், அவர் தவறான/பொய்யான செய்தி ஊடகங்களின் பார்வையில் மட்டுமே ஜோ பைடன்  வென்றார். தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் நான் எதையும் ஒப்புக்கொள்ள வில்லை! நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இது சரியான தேர்தல் அல்ல என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.      

20:17 (IST)15 Nov 2020

கடந்தாண்டு இதே கால காரீப் பருவ நெல் கொள்முதலைவிட 21.27% அதிகம் – மத்திய அரசு

நடப்பு காரீப் பருவத்தில், இதுவரை 279.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 24.02 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.52,781. 42 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு காரீப் பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நெல் கொள்முதல் சுமூகமாக நடக்கிறது. கடந்த 14ம் தேதி வரை 279.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே கால காரீப் பருவ நெல் கொள்முதலைவிட 21.27% அதிகம் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

19:47 (IST)15 Nov 2020

சமூக பாதுகாப்பு நெறிமுறை 2020-ன் வரைவு விதிகள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமூக பாதுகாப்பு நெறிமுறை 2020-ன் வரைவு விதிகள் குறித்த  ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்வர்கள், அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து (நவம்பர் 13 அன்று வெளியானது) 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐசி, பணிக்கொடை, பேறுகால சலுகை, சமூக பாதுகாப்பு மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கான மேல்வரி, முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்ரகள், நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகளை இந்த வரைவு விதிகள் வழங்குகின்றன. 

19:40 (IST)15 Nov 2020

சிலிண்டர் விபத்து: இறந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயும் அரசு வேலையும் தர வேண்டும் – ஆரணி எம்.பி

திருவண்ணாமலை சிலிண்டர் சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி, ஹேமநாதன், சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும் அரசு வேலையும் தர வேண்டும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 25  லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் கே. விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.    

19:33 (IST)15 Nov 2020

பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளுரில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

19:00 (IST)15 Nov 2020

தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,819  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,58,191 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

17:48 (IST)15 Nov 2020

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் – ரவிக்குமார் எம்.பி கடிதம்

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

கடிதத்தில், ” மத்திய அரசின் அணுசக்தித்துறைக்குக் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கல்பாக்கத்தில் உள்ள ‘நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ( NPCIL) ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் இல்லை. இதனால் அங்கு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரும் விழுப்புரம் எம்.பியுமான ரவிக்குமார் கடிதம் மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

16:32 (IST)15 Nov 2020

வங்காள சினிமா நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி மரணம்; தலைவர்கள் இரங்கல்

வங்காள சினிமா நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி காலமானார். அவருடைய மறைவுக்கு சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச, இந்திய மற்றும் வங்காள சினிமா இன்று ஒரு மேதையை இழந்துவிட்டது. மேற்கு வங்காளத்திற்கு இன்று சோகமான நாள். குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செளமித்ர சாட்டர்ஜி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

16:25 (IST)15 Nov 2020

திருச்சியில் அரசு பேருந்தை கடத்திய நபர் கைது

திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தை கஞ்சா போதையில் ஒருவர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடத்தப்பட்ட பேருந்தை 2 கி.மீ தொலைவில் மடக்கிப் பிடித்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

16:17 (IST)15 Nov 2020

ஆரணியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி; 4 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முத்தம்மாள் என்பவரின் வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக, சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காமாட்சி, சந்திரா அம்மாள், ஹேமநாதன் என்ற சிறுவன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

16:11 (IST)15 Nov 2020

பீகார் தேர்தலில் அதிகாரிகள் வாக்காளர்கள் பயன்படுத்திய 160 டன் மருத்துவக் கழிவுகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்ட பீகார் தேர்தலின் போது வாக்கு மைய அதிகாரிகள், வாக்காளர்களால் பயன்படுத்தப்பட்ட கிளவுசுகள், முகக்கவசம், காலியான சானிடைசர் பாட்டில்கள் என 160 டன் பயோமெடிக்கல் கழிவுகள் உற்பத்தியாகியுள்ளது என்று பீகார் மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

16:10 (IST)15 Nov 2020

மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதி

மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15:22 (IST)15 Nov 2020

சென்னையில் கடந்த தீபாவளியைவிட இந்த ஆண்டும் காற்று, ஒலி மாசு குறைவு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னையில் கடந்த தீபாவளியைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று, ஒலி மாசு குறைந்துள்ளது என்று மாடு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டைவிட ஒலி மாசு 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

14:35 (IST)15 Nov 2020

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவில் என்.டி.ஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெற்ற என்.டி.ஏ எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஜே.டி.(யு) தலைவர் நிதிஷ் குமார் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நிதிஷ் குமார் 4வது முறையாக பீகார் முதல்வராகிறார்.

13:48 (IST)15 Nov 2020

அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் – பாஜக தலைவர் எல்.முருகன்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

13:42 (IST)15 Nov 2020

தேசிய பத்திரிகை தினம்: பத்திரிகையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகையாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்கள் வாழ்வில் உலக வாழ்வு அடங்கி இருக்கிறது. உங்களது வெற்றியில் உலக வெற்றி உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்!

பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

13:39 (IST)15 Nov 2020

தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினம் நாளை (நவம்பர் 16) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகை துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

13:18 (IST)15 Nov 2020

விசாரணைக் குழு அமைத்த பிறகு துணை வேந்தர் சூரப்பா பதவியில் தொடர்வது ஏன்? ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்த பிறகு துணை வேந்தர் சூரப்பா பதவியில் தொடர்வது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டுவிட்ட பிறகும் அவர் பதவியில் தொடரும் மர்மம் என்ன? பேரமா? முதல்வரின் நாடகமா?

உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, ஆவணங்கள் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

13:14 (IST)15 Nov 2020

முழு கொள்ளளவை வேகமாக நெருங்குகிறது செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டி வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

12:38 (IST)15 Nov 2020

ஓசூர் அருகே வனப்பகுதியில் ஒரு யானை மர்ம மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

12:30 (IST)15 Nov 2020

நவம்பர் 21ம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 21ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பாஜகவினர் அனுமதியின்றி வேல் யாத்திரை நடத்திவரும் நிலையில் அமித்ஷா தமிழகம் வருவது கவனம் பெற்றுள்ளது.

12:16 (IST)15 Nov 2020

தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள்

தீபாவளி திருநாளன்று தமிழகத்தில் மொத்தம் ௧௦௬ தீ விபத்துகளும் ராக்கெட் வெடியால் சென்னையில் 33 விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 7 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்திருக்கின்றன.

11:20 (IST)15 Nov 2020

தீபாவளியை முன்னிட்டு 466 கோடிக்கு மது விற்பனை

தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழகத்தில் ரூ.465.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் ரூ.103.82 கோடிக்கும், திருச்சியில் ரூ.95.47 கோடிக்கும், சென்னையில் ரூ.94.36 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

09:22 (IST)15 Nov 2020

சென்னையில் விதி மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு

தீபாவளி நேரங்களில் அதிகப்படியான காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காகத் தமிழ்நாட்டில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை ஆகிய குறிப்பிட்ட இந்த இரண்டு மணிநேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதி பிறப்பித்தது. ஆனால், சென்னையில் இந்த விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது சென்னை காவல்துறை.

09:07 (IST)15 Nov 2020

காற்று மாசு அதிகரிப்பு!

சென்னையில், காலை 100-ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு, மாலையில் 159-க்கு அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது, ஒரு நாளுக்கு 4 சிகரெட் புகைப்பதனால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பிற்குச் சமம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தூத்துக்குடி, கடலூர், மதுரை, ஓசூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். என்றாலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாசின் அளவு குறைந்திருக்கிறது.

08:28 (IST)15 Nov 2020

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Today’s Tamil News : தமிழகத்தில் செயல்படும் 6 அரசு மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும், 3 தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்குவதற்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 84.14-க்கும், டீசல் ரூ. 75.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news live updates chennai weather politics dmk admk latest movie teaser

Next Story
தொடர்ந்து 2-வது நாள்: தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2, 000க்கும் கீழ் குறைந்ததுSpread of corona virus in flight is low explained
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express