/indian-express-tamil/media/media_files/2025/02/22/L2j9LwMimzKdMhWL8U6J.jpg)
தெருநாய் கடித்து ஆடுகள் பலி: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 918 ஆடுகள் உயிரிழந்துள்ளன. வேட்டை நாய்களாக மாறிய தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போர்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Feb 22, 2025 20:54 IST
துண்டு பிரசுரம் வழங்கிய எம்.எல்.ஏ
இந்தி திணிப்புக்கு எதிராக கொடைக்கானலில் தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதனை தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான செந்தில் குமார் வழங்கினார்.
-
Feb 22, 2025 19:39 IST
குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தில் உள்ள குளத்தில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள், உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
-
Feb 22, 2025 19:13 IST
தீயணைப்பு வீரர்கள் காயம்
ராணிப்பேட்டை அடுத்த கலவை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை விரிவாக்கத்திற்காக வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, 4 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
-
Feb 22, 2025 18:13 IST
குளத்தில் மூழ்கி 4ம் வகுப்பு மாணவன் மரணம்
விழுப்புரம்: திண்டிவனம் அருகே 4ம் வகுப்பு மாணவன் பாலமுருகன், குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்,இன்று விடுமுறை என்பதால் பெற்றோருடன் விவசாய நிலத்திற்குச் சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 22, 2025 14:52 IST
கோவை ஈஷா மைய மகாசிவராத்திரி - அமித்ஷா, டி.கே.சிவக்குமார் பங்கேற்பு
ஈஷா மைய மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா, கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்கின்றனர். ஈஷா அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கோவையில் அளித்த பேட்டியில், “கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா பிப்., 26ம் தேதி இரவு நடைபெறவுள்ளது” என்றார்.
-
Feb 22, 2025 13:56 IST
வி.கே.குருசாமி மீதான வழக்கு ரத்து
தி.மு.க முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடன் கொடுக்கல், வாங்கல் தொடர்பான புகாரில் வி.கே.குருசாமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக கடந்தாண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல முடிவு செய்து இருப்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனுதாரர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
-
Feb 22, 2025 13:43 IST
தர்மபுரியில் முலாம்பழம் விற்பனைக்கு குவிப்பு
தர்மபுரியில், முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, கோடை வெயில் கொளுத்தும். நடப்பாண்டு கோடைக்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணி, முலாம்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. தர்மபுரி சந்தையில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒருகிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 22, 2025 12:57 IST
திடீரென தீப்பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திடீரென தனியார் கல்லூரி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்து தீயை அணைத்தனர் தீயணைப்பு வீரர்கள்
-
Feb 22, 2025 12:38 IST
எங்களுக்கு எந்த பயமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
"எங்களுக்கு எந்த பயமும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும்வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, பயமும் இல்லை. எங்கள் கல்வி எங்கள் உரிமை." என்று பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
-
Feb 22, 2025 12:33 IST
உலக தாய்மொழி நாள்
நாமக்கல்: உலக தாய்மொழி நாளையொட்டி தமிழ் எழுத்து வடிவில் நின்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் சிறப்பித்தனர்.
-
Feb 22, 2025 12:12 IST
மன்னார்குடி - லாரிகள் சிறைபிடிப்பு
மன்னார்குடி அருகே கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள், கட்டட தொழிலாளர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கண்டித்து இந்த போராட்டம் நடந்து வருகிறது.
-
Feb 22, 2025 11:25 IST
ரூ.1671 கோடி பினாமி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் பினாமி பெயரில் நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ரூ.1671 கோடி மதிப்பு சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி செய்துள்ளது.
-
Feb 22, 2025 11:19 IST
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாணவர் சடலம்
கரூர் குளித்தலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு பொறியியல் படித்து வந்த மாணவரின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது.
-
Feb 22, 2025 10:35 IST
"பவானி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டாம்"
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலாங்கொம்பு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறிய நிலையில், ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
-
Feb 22, 2025 10:34 IST
கடலூரில் ஸ்டாலின் ரோடு ஷோ
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நடைபெற்றது. ஸ்டாலின் உடன் மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
-
Feb 22, 2025 09:53 IST
இறைவனின் முன்பு அனைவரும் சமம் - சேகர்பாபு
சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏற நீதிமன்றம் அனுமதி தந்தது வரவேற்கத்தக்கது. இறைவனின் முன்பு அனைவரும் சமம். சட்ட போராட்டம் என்பது 2000 ஆண்டுகளாக நடைபெறுகிறது. அதற்காகவே அரசு செயல்படுகிறது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
Feb 22, 2025 09:10 IST
திருவாரூரில் பொதுமக்கள் போராட்டம்
திருவாரூரில் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Feb 22, 2025 09:09 IST
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 918 ஆடுகள் உயிரிழந்துள்ளன. வேட்டை நாய்களாக மாறிய தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போர்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.