/indian-express-tamil/media/media_files/2025/04/10/gg5IsbTjsnsGphqoTSy4.jpg)
மழை நிலவரம்: நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று (ஏப்.10) கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குட் பேட் அக்லி: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
-
Apr 10, 2025 21:35 IST
மாணவி வகுப்பறையின் வாசலில் அமர வைக்கப்பட்ட விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை: கிணத்துக்கடவு அருகே பூப்பெய்திய மாணவி வகுப்பறையின் வாசலில் அமர வைக்கப்பட்ட விவகாரம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Apr 10, 2025 20:45 IST
23 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கோவை, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 19:44 IST
பி.சீனிவாசராவ் பிறந்த நாள்: சிபிஐ முத்தரசன் உள்ளிட்டோர் மரியாதை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மறைந்த மூத்த தலைவரும், தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களுக்காக வாழ்நாள் இறுதிவரை போராடிய பி.சீனிவாசராவ் அவர்களின் பிறந்த நாள். திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் மரியாதை
-
Apr 10, 2025 19:33 IST
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சதம் கடந்த வெயில்
தமிழகத்தில் இன்று வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதமடித்தது வெயில் வேலூரில் 105.1 டிகிரி, கரூரில் 100 டிகிரி
ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது -
Apr 10, 2025 19:32 IST
அன்புமணி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸ் ஆலோசனை
பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் சுமார் ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
-
Apr 10, 2025 19:28 IST
பங்குனி உத்திரம்: திருத்தணி முருகன் கோவிலில் வாகனங்களுக்கு தடை
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் நாளை அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்ல அனைத்து வாகனங்களுக்கும் நாளை காலை தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Apr 10, 2025 18:40 IST
கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம்; போராட்டம் நடத்த முடிவு
கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கு உரிய வளர்ப்புக்கூலி வழங்கப்படாததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறோம். தனியார் நிறுவனங்கள் உரிய காலத்திற்குள் வளர்ப்பு கூலி வேண்டும். வழங்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
-
Apr 10, 2025 18:07 IST
அண்ணன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி விஷம் குடித்த தங்கை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
அண்ணன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி விஷம் குடித்த தங்கையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்கு பதிய உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
-
Apr 10, 2025 17:49 IST
நெல்லை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
நெல்லை புறநகர் அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை அருகே கொட்டப்பட்டுள்ள மருந்து பாட்டில்கள், ஊசி உள்ளிட்ட கழிவுகள் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நெறிமுறைகளை பின்பற்றவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
-
Apr 10, 2025 16:40 IST
மாணவியின் தாயார் தான் தனியாக உட்கார்ந்து தேர்வெழுத சொன்னதாக தகவல் - கோவைஎஸ்.பி பேட்டி
மாணவியின் தாயார் தான் தனியாக உட்கார்ந்து தேர்வெழுத சொன்னதாக தகவல் என்று மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம் குறித்து பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி. சிருஷ்டி சிங் தெரிவித்துள்ளார்.
-
Apr 10, 2025 16:12 IST
கோவை தனியார் பள்ளி விவகாரம்: அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம் - அன்பில் மகேஸ்
கோவை தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை. நாங்கள் இருக்கிறோம், இருப்போம்.” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Apr 10, 2025 16:01 IST
கோவையில் தனியார் பள்ளி மாணவி வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம்; பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
கோவையில் தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வாசலில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த புகாரில் பள்ளியின் முதல்வர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை அதிகரிகள் இன்று காலை முதல் பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Apr 10, 2025 15:32 IST
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கனிமொழி எம்.பி
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனம், பட்டா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள முத்து அரங்கில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் வாழ்வுத்துறை சார்பாக 2 கோடி 28,944 ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பயன்பாட்டிற்கு பல்வேறு வகையான மருத்துவ உபகரணங்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக 93 பயனாளிகளுக்கு ரூ. 54 இலட்சம் 2,670 ரூபாய் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 67 இலட்சம் 18,800 ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனம் ஆகியவற்றை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாட்ட சுகாதார அலுவலர் யாழினி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
-
Apr 10, 2025 15:30 IST
மீனவர்களுக்கான எச்சரிக்கை
"இன்று முதல் 12ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மற்றும் நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இன்று இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்." என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 10, 2025 15:28 IST
கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 1730 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று காலை 0830 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 15:08 IST
திருச்சியில் முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவம் - 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை, இ.பி ரோடு பகுதியை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Apr 10, 2025 14:27 IST
சாதி பெயரை குறிப்பிடக் கூடாது உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் இடைக்காலத் தடை
கோயில் திருவிழாக்களின்போது குறிப்பிட்ட சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. இந்து ஆலய பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ஆறுமுக நயினார், ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அறநிலைய ஆணையரின் சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை; ஆணையர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 14:02 IST
‘இந்தக் கேள்விகளை மட்டும் கேளுங்க' - எம்.பி. சர்ச்சை!
கும்பகோணம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, துண்டு சீட்டில் கேள்விகளை கொடுத்து அந்த கேள்விகளை மட்டும் கேட்குமாறு கூறியதால் சர்ச்சை. வேறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டதால் பதில் அளிக்க முடியாமல் திணறியதால் அதிர்ச்சி
-
Apr 10, 2025 13:18 IST
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய கும்பல் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மீது தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்திய ட்ராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனை தாக்கிய குமரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்துள்ளது காவல்துறையினர்.
-
Apr 10, 2025 12:25 IST
மாதவிடாய் சர்ச்சை: தனியார் பள்ளியில் காவல் அதிகாரி விசாரணை
பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த பள்ளியில், காவல் உயர் அதிகாரி நேரில் விசாரணை செங்குட்டைபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 10, 2025 11:06 IST
தூத்துக்குடி: 1,000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தம்
கடலில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 1,000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தபட்டுள்ளது. தென் கடலோர குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Apr 10, 2025 10:51 IST
திருவாரூர்: கனரக லாரி சாய்ந்ததில் 3 பேர் பலி
திருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற கனரக லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 10, 2025 10:38 IST
ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைகாலம் அமல்
மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; தடைக்காலத்தை அக்டோபர் மாதத்திற்கு மாற்றி, நிவாரணத்தை ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Apr 10, 2025 10:16 IST
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு
நாளை பங்குனி உத்திரத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 100 டன் பூக்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ஒரே நாளில் ரூ.1,500 உயர்ந்து ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.500க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 10, 2025 10:08 IST
கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து
கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்தனர். இதில் அரசுப், பேருந்து சாலையில் இருந்து வயல்வெளியில் இறங்கியது.
-
Apr 10, 2025 09:57 IST
அஜித் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு
நெல்லையில் பிஎஸ்எஸ் தியேட்டரில் 200 அடி கட் அவுட் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் எதிரொலியாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 09:54 IST
ரசிகர் முதுகில் டாட்டூ
குட் பேட் அக்லி என ரசிகர் ஒருவர் முதுகில் டாட்டு போட்டு வந்து படம் பார்த்தார்.
-
Apr 10, 2025 09:13 IST
தேனியில் GBU திருவிழா கொண்டாட்டம்
தேனியில் ஜிபியு ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.
-
Apr 10, 2025 09:11 IST
ஏஐ ஆசிரியர் அறிமுகம்
ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 'மார்க்ரெட்' எனப் பெயரிடப்பட்ட AI ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சர்ச் என்ஜின் உதவியுடன் பதிலளிக்கிறது. 50 மொழிகளை தெரிந்துவைத்துள்ள இந்த ரோபோ, திருக்குறளை விளக்கத்துடன் சொல்லி அசத்துகிறது.
-
Apr 10, 2025 09:10 IST
நாயை கவ்விச் சென்ற சிறுத்தை
உதகை தலையாட்டுமந்து பகுதியில் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த நாயை, கவ்விச் சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 09:09 IST
மழை நிலவரம்
நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று (ஏப்.10) கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 10, 2025 09:09 IST
பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 09:08 IST
தங்கத் தேர் புறப்பாடு ரத்து
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் இன்று (ஏப்.10) முதல் 4 நாட்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Apr 10, 2025 09:07 IST
மாதவிடாய் காரணம் காட்டி வாசலில் அமரவைத்து தேர்வு
கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி, மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Apr 10, 2025 09:06 IST
வெள்ளி வேல் திருட்டு - ஒருவர் கைது
கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ வெள்ளி வேல் திருடப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.