/indian-express-tamil/media/media_files/2025/04/16/jxIT5PgFcvqjSGMRQRGY.jpg)
திருவாரூரில் கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட நகராட்சி கட்டட ஆய்வாளர் நாகராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 748 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 107.48 அடியாகவும், நீர் இருப்பு 74.876 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
-
Apr 16, 2025 20:29 IST
வனத்தீ பருவகாலம் நிறைவு - மலை ஏற்றத்துக்கான 23 வழிகள் திறப்பு
வனத்தீ பருவகாலம் முடிவுறும் நிலையில் இன்று முதல் மலையேற்றத்துக்கான 23 தடங்கள் திறக்கப்படுகிறது. பாதைகள் எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டவைகளாக முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தை வழங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வனத்துறை மூலம் இயற்கையைப் போற்றுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மலையேற்ற திட்டம் (Trek Tamil Nadu) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 24.10.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இத்துடன் இணையவழி முன்பதிவிற்கான வலைதளமும் www.trektamilnadu.com- ம் தொடங்கி வைக்கப்பட்டது.
-
Apr 16, 2025 18:40 IST
தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையை, அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொலையாளிகள் வைத்துள்ளனர். முன்விரோதம் காரணமாக குத்தாலிங்கம்(32) என்பவரை படுகொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 16, 2025 18:13 IST
நெல்லை அருகே லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
நெல்லை மாவட்டத்தில் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் ரூ.4000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார். சொத்து பெயர் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கியபோது பில் கலெக்டர் காளிவசந்த் கையும் களவுமாக சிக்கினார்.
-
Apr 16, 2025 17:48 IST
வரதட்சணையாக கேட்டோமா? - இருட்டுக்கடை உரிமையாளரின் மருமகன் தரப்பு மறுப்பு
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்தப் பெண் கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் சிங் இது குறித்து கோவையில், செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில், "நாங்கள் எப்பொழுதும் அவர்களுடன் சுமுகமாக போக வேண்டும் என்று தான் நினைத்தோம். அதேபோல இருட்டு கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில் தான் அந்த கடை இருந்தது.. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது.
அவர்களின் உறவினர்கள் எல்லாம் அவர்கள் இறந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே, அவரை எடுக்க வேண்டும் எனக் கூறும்போது, அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறி இருந்தனர். அந்த சுலோச்சனா பாய் இவர்களுக்கு எழுதிக் கொடுத்ததாக இவர்கள் கூறுகின்றனர். ஹரிசிங் என்பவர் தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில் தான் இறந்தார். கடையே அவர்களுக்கு இப்பொழுது தான் வந்து இருக்கிறது அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள் அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அந்தப் பெண் எங்கள் வீட்டில் இருந்து ஒரு துணியை கூட எடுத்துச் செல்லவில்லை. ஆனால் அந்த சூட்கேஸை எடுத்துச் சென்று இருக்கிறார். அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும் கூட அவர்களின் வீட்டிலேயே தான் இருக்கிறது.
திருமணம் நடந்து சிறிது நாட்கள் தான் ஆகி இருக்கிறது. சமாதானமாக சென்று விட வேண்டும் என்பதற்காக தான் பேசப்பட்டது. இருட்டுக்கடை மோசடி செய்து அவர்களின் கைக்கு வந்தது எங்கு வெளியே தெரிந்து விடுமோ ? என்பதற்காக தான், இவ்வளவு பிரச்சனைகள் நடந்து இருக்கிறது, குறிப்பாக என்னுடைய மகன் அவர்களின் வீட்டு மாப்பிள்ளை வர வேண்டும் என்பது தான் அவர்களின் கட்டாய கருத்தாக இருந்தது. என் மகன் வர முடியாது என்று கூறியதால் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனைகள் ஆரம்பமாகியது." என்று யுவராஜ் சிங் கூறினார்.
கனிஷ்காவின் கணவர் பேசும்போது, "நான்கு தினங்களுக்கு முன்பு நான் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மன்னிப்பு கூட கேட்டேன். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது ஆதாரம் அற்ற புகாராக தான் இருக்கும். அப்படி கொலை மிரட்டல் விடுத்து இருந்தால் எப்படி அவரிடம் நான் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருப்பேன். மூன்று தினங்களுக்கு முன்னர் கூட நான் தொலைபேசியில் அழைத்து கனிஷ்காவிடம் மன்னிப்பு கேட்டேன்." என்று அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங், "என்னை பற்றி யாரிடம் வேண்டுமென்றாலும் விசாரித்துக் கொள்ளலாம், நான் கண்ணியம், கட்டுப்பாடோடு கடந்த 30 வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். நான் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் பொறுப்பில் இருந்த ஒரு நபராக இருக்கிறேன். அப்படிப்பட்ட என் மீது அபாண்டமான பழி சுமத்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன், இன்றைய தினமும் கூட ஜி.எஸ்.டி ஆபீஸில் அவர்கள் போர்ஜரி செய்ததற்கான டாக்குமெண்ட் இருக்கிறது. அதை முடியும் மறைத்து, சம்பந்தப்பட்ட பையனை அடித்த உதைத்து இதை எழுதி வாங்குகிறார்கள் என்பதை நான் சந்தேகப்படுகிறேன். அதை உறுதி செய்து, உண்மையான இருட்டு கடை உரிமையாளருக்கு நியாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அதேபோல நான் வைத்து இருக்கும் இருசக்கர வாகனத்தின் விலை தான் இருட்டுக்கடை அல்வாவின் ஒரு வருட வருமானமாக இருக்கும். அந்த நிலையில் நான் இருக்கும் பொழுது நான் ஏன் வரதட்சணை கேட்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் பேசும்போது, "அவருக்கு, நள்ளிரவில் நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகிறது, நிறைய ஆண் நபர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதையெல்லாம் நான் எதிர்த்து கேட்கும்பொழுது நான் அப்படி தான் செய்தேன் என கூறினார். அதைக் கூட நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வெளியில் சென்றால் கூட இடது கண் கேட்கக் கூடாது என்று சொன்னதால் தான் பிரச்சனை ஆரம்பமாகியது." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங், "நான் நிறைய குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் நான் சிறிய குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என நினைத்து திருமணம் செய்தோம். நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்பதை நீங்கள் திருநெல்வேலியில் யாரை வேண்டுமானாலும் சந்தித்து கேட்டு கொள்ளலாம். இதற்கு முன்னரே இந்த பெண்ணுக்கு முதலில் மூன்று இடங்களில் திருமணம் நிச்சயமாகி நின்று போய் விட்டது. இதுவும் திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது. திருமணத்திற்கு முன்பு பெண்ணின் வீட்டாரை பற்றி நீங்கள் விசாரிக்கவில்லையா ? என்றால், அவர்கள் யாருடனும் பழக மாட்டார்கள், தனியாகத் தான் இருப்பார்கள் என்று கூறினார்கள். அதனால் நல்லவர்கள் என்று தான் நினைத்தோம். சொத்து பிரச்சனை என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்தோம். பெண்ணின் தாய்மாமனே திருமணத்திற்கு வரவில்லை. திருமணத்திற்கு பிறகு தான் அனைத்துமே தெரிய வந்தது என கூறினார்.
பல்ராம் சிங் பேசும்போது, "40 நாட்களிலேயே என்னுடைய தாய் தந்தையை மிகவும் அசிங்கமான முறையில் பேசி நடந்து கொண்டார்" என கூறினார்.
-
Apr 16, 2025 17:14 IST
நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிப்பு
நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாநகர காவல் துணை ஆணையாளர் கீதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Apr 16, 2025 16:51 IST
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்; மாணவர்கள் போராட்டம்
கோவையில் தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவியின் உடலை வாங்க மறுத்து சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இழப்பீடு மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
-
Apr 16, 2025 16:14 IST
தென்காசியில் காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காணாமல் போன 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கபட்டுள்ளார். சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம், அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி சென்றுவிட்டு இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில், சாம்பவர்வடகரை பொய்கை ரோட்டில் உள்ள கிணற்றில், சிறுவன் பொன்ராம் சடலமாக கிடந்துள்ளார். செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்து சிறுவன் பொன்ராம் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது
-
Apr 16, 2025 14:17 IST
விருதுநகர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை
விருதுநகரில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு இலவசமாக Braces பொருத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 'மலரும் புன்னகை' திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Apr 16, 2025 13:57 IST
அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடைவிதித்திருந்த நிலையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Apr 16, 2025 13:34 IST
கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும்போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும்போது தவறி விழுந்த கேசவன் (56) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி இச்சம்பவம் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழந்தார்.
-
Apr 16, 2025 12:48 IST
கோவையில் தமிழ்த்தாய் உருவச்சிலை
``கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச் சிலை நிறுவப்படும்..'' - சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
-
Apr 16, 2025 12:47 IST
“வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்டு மிரட்டல்”
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா, நெல்லை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளனர். திருமணமாகி 40 நாள்களிலேயே வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி, கணவர் வீட்டினர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அழைத்துள்ளார்.
-
Apr 16, 2025 12:15 IST
கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை
கோவை இந்துஸ்தான் பாரா மெடிக்கல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை. கல்லூரியில் பணம் காணாமல் போனது தொடர்பாக அண்மையில் விசாரணை நடந்துள்ளது; மாணவி அனுப்பிரியாவிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தப்பட்டதால் தற்கொலை என பெற்றோர் கதறல்; மாணவி கீழே விழுந்துவிட்டதாக கல்லூரியில் இருந்து அழைத்ததாகவும், இறந்த தகவலை கூறவில்லை என புகார்; கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
-
Apr 16, 2025 11:34 IST
பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்து பலி
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
-
Apr 16, 2025 10:50 IST
மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் தற்கொலை முயற்சி
சேலத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு. இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த பயணிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் சம்பவம் நடந்தது.
-
Apr 16, 2025 10:12 IST
புத்தகப்பைகளில் தீவிர சோதனை
நெல்லை பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் புத்தகப்பைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. புத்தகப்பைக்குள் அரிவாளை மறைத்து எடுத்து வந்த சக மாணவன் மற்றும் ஆசிரியரை 8 ஆம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டியதை அடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
-
Apr 16, 2025 09:51 IST
காங். நிர்வாகி மர்ம மரணம் - போலீஸ் விசாரணை
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இயற்கை மரணமா? தற்கொலையா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
-
Apr 16, 2025 09:34 IST
நெல்லை-தென்காசி பேருந்துகளில் டிஜிட்டல் முறை
நெல்லை மற்றும் தென்காசி இடையே பயணிக்கும் பயணிகள் இனி பேருந்து டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில், கூகிள் பே (GPay), போன் பே (PhonePe) போன்ற செயலிகள் மூலமாகவோ (அ) டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்தோ (அ) கியூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்தோ பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
-
Apr 16, 2025 09:24 IST
தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் மாரியம்மன் கோவிலில் மீட்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகளும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். மாரியம்மன் கோவிலில் மீட்கப்பட்ட 5 மாணவிகளும் பவானி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடன் விசாரணை நடைபெற்றது. பின்னர், மாணவிகள் 5 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.