Advertisment

Tamil News Highlights: ஃபீஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.2000 கோடி நிவாரணம் கேட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin Modi Meeting

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அன்றைய வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80 காசுக்கும், டீசல் ரூ. 92.39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நிலவரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில், 309 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில் நேற்று ஒரே நாளில் 196 ஏரிகள் நிரம்பி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 02, 2024 22:00 IST

    திருவண்ணாமலை மண் சரிவு மீட்பு பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு

    திருவண்ணாமலை மண்சரிவு மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.



  • Dec 02, 2024 21:59 IST

    மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

    மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழ்நாடு அரசின் 'டான்டீ' தேயிலை தோட்டக் கழக நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்டதால் அதை வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் இவ்வழக்கில் வாதிடப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு, வீட்டு மனை, கடன் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.



  • Advertisment
    Advertisement
  • Dec 02, 2024 21:57 IST

    பூண்டி ஏரி, 7 மாதங்களுக்குப் பிறகு 1 டி.எம்.சி.யை எட்டியது

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி, 7 மாதங்களுக்குப் பிறகு 1 டி.எம்.சி.யை எட்டியது.  ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் வெள்ள உபரி நீர், பூண்டி ஏரிக்கு திருப்பி விடப்பட்டதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 3690 கன அடியாக உள்ளது



  • Dec 02, 2024 21:04 IST

    8 மணி நேரத்திற்குப் பிறகு அரசூரில் போக்குவரத்துக்கு அனுமதி

    விழுப்புரம் அருகே உள்ள அரசூர் என்ற இடத்தின் வழியாக 8 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து திருச்சி செல்லக்கூடிய சாலையில் ஒருபுறம் தண்ணீர் வடிந்துள்ளதால், அந்த மார்க்கத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியது காவல்துறை.



  • Dec 02, 2024 21:01 IST

    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபீஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன் என  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Dec 02, 2024 20:59 IST

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை 

    கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • Dec 02, 2024 20:58 IST

    ரயிலில் பயணித்த பயணி மரணம் 

    பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தென்காசியை சேர்ந்த அஜித்குமார் (29) திடீர் மரணமடைந்துள்ளார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும்போது ரயிலில் உயிரிழந்துள்ளார்



  • Dec 02, 2024 20:57 IST

    6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீடிப்பு

    ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 10வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.



  • Dec 02, 2024 20:07 IST

    திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

    திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Dec 02, 2024 19:50 IST

    திருவண்ணாமலை மண் சரிவு - 5 பேரின் சடலங்கள் மீட்பு

    திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 5 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மண் சரிவு - இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பாறைகள் அதிகம் இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்



  • Dec 02, 2024 19:25 IST

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுமுறை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன



  • Dec 02, 2024 19:04 IST

    மின்கட்டணம்  தொகை செலுத்த கால அவகாசம் 

    ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை  ஆகிய 6 மாவட்ட மக்கள், மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிக்கப்பட்டுள்ளது.  



  • Dec 02, 2024 18:56 IST

    மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு 

    திருப்பத்தூர் அருகே மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் குமரன் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.



  • Dec 02, 2024 18:52 IST

    திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு - அன்புமணி இரங்கல் 

    அன்புமணி  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகம். திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், ஒரு சிறுவன் உட்பட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

    அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சூழல்களில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இரு அவர் பதிவிட்டுள்ளார். 



  • Dec 02, 2024 18:48 IST

    தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு 

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக இருக்கும் நிலையில், அதே அளவிலான தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது



  • Dec 02, 2024 18:47 IST

    1200 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் 

    தமிழ்நாடு சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 1200 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய 963 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.யில் பணி நியமன ஆணைகளை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்



  • Dec 02, 2024 18:42 IST

    விழுப்புரத்தில் 8 பேர் பலி 

    விழுப்புரம் மாவட்டத்தில் ஃபீஞ்சல் புயல் மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாத்தனூர் கிராமத்தில் இரு மூதாட்டிகள், தொந்திரெட்டிப்பாளையம் பகுதியில் சிவக்குமார் என்பவர், டாஸ்மாக் ஊழியரான சக்திவேல் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்



  • Dec 02, 2024 18:36 IST

    திருவண்ணாமலை மண் சரிவு இதுவரை!

    திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண் சரிவில் சிக்கிய நிலையில், 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன

    சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர்.மழை குறுக்கிட்ட போதிலும் 12 மணி நேரத்தீற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன



  • Dec 02, 2024 18:36 IST

    சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் பழுது - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அப்டேட் 

    சென்னை : சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 



  • Dec 02, 2024 18:27 IST

    திருவண்ணாமலை மண் சரிவு -  2 பேரின் உடல் மீட்பு!

    திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கிய நிலையில், இதுவரை இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 



  • Dec 02, 2024 18:23 IST

    சென்னையில் பூங்கா திறப்பு 

    ஃபீஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழை முடிவுற்றதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு இன்று மாலை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார். 



  • Dec 02, 2024 18:18 IST

    இலங்கையில் கனமழை- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

    வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகினர். இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



  • Dec 02, 2024 18:16 IST

    கனமழை பாதிப்பு - தருமபுரியில் உதயநிதி  நேரில் ஆய்வு

    தருமபுரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.



  • Dec 02, 2024 16:46 IST

    திருவண்ணாமலையில் மண் சரிவு; மீட்பு பணிகள் தீவிரம்

    திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மழை இடையிடையே பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



  • Dec 02, 2024 16:38 IST

    காஞ்சிபுரம் செண்பகத் தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

    காஞ்சிபுரம் செண்பகத் தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிலாம்பாக்கம், வெங்கச்செரி, மாகறல், காவந்தண்டலம், அவளூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Dec 02, 2024 16:30 IST

    சென்னை - விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரிசெய்யப்படும்; அதிகாரிகள் தகவல் - சு. வெங்கடேசன் பதிவு

    சென்னை - விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். இன்றிரவு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் அநேகமாக ரத்தாக வாய்ப்பு இல்லை. புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். தென்னக ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த தகவலைப் பகிர்வதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.



  • Dec 02, 2024 16:12 IST

    திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு

     திருவண்ணாமலையில் தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவுக்கு மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது; ஏற்கெனவே வ.உ.சி நகர் மலைப் பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.



  • Dec 02, 2024 15:40 IST

    ஆற்று வெள்ளம் காரணமாக கடலூர் - புதுச்சேரி இடையே போக்குவரத்து துண்டிப்பு

    கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரின் அளவு காலை 1.7 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2.4 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் - புதுச்சேரி சாலையில் பெரியகங்கணாகுப்பம் பகுதியில் ஆற்று வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



  • Dec 02, 2024 14:54 IST

    மழை சேதங்களை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ்

    விழுப்புரம் மாவட்டம், ரெட்டணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.



  • Dec 02, 2024 14:21 IST

    மீட்பு பணிகள் தீவிரம் - ஸ்டாலின்

    விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மீட்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 900 மின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



  • Dec 02, 2024 14:04 IST

    வழக்கத்திற்கு மாறாக அதிக மழை - ஸ்டாலின்

    விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு மழை பெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 02, 2024 13:47 IST

    7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 02, 2024 13:35 IST

    நிர்மலா சீதாராமன் உடன் தங்கம் தென்னரசு சந்திப்பு

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜி.எஸ்.டி வரி பகிர்வு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சனை ஆகியவை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



  • Dec 02, 2024 13:25 IST

    மழை பாதிப்பு குறித்து இ.பி.எஸ் நேரில் ஆய்வு

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.



  • Dec 02, 2024 13:17 IST

    2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

    நீலகிரி, கோவைக்கு இன்று (டிச 2) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 02, 2024 13:02 IST

    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிப்பு 

    விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிப்பு. அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் ஓடுவதால் வாகனங்கள் சாலையிலேயே  ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன, 

     



  • Dec 02, 2024 13:01 IST

    நிரம்பும் வீராணம் ஏரி- 700 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

    தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு 700 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.

    வெள்ளியங்கால் ஓடையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 02, 2024 12:32 IST

    பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

    வரலாறு காணாத கனமழையை அடுத்து நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, ஆர்.ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



  • Dec 02, 2024 12:19 IST

    நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்

    விழுப்புரம் : மரக்காணத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து மந்தவாய்புதுகுப்பம் முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார், 



  • Dec 02, 2024 12:00 IST

    ஹெச்.ராஜா தண்டனை நிறுத்திவைப்பு

    பெரியார் சிலையை உடைப்பேன் எனப் பேசிய வழக்கு மற்றும் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில்  ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து தலா 6 மாதம் சிறை  தண்டனை  வழங்கியது. 

    இரு பதிவுகளும் அவருடைய X தளப் பக்கத்தில்தான் வெளியானது என நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி  1 வருட சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. 



  • Dec 02, 2024 11:30 IST

    ஹெச்.ராஜா குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

    பெரியார் சிலையை உடைப்பேன் எனப் பேசிய வழக்கு மற்றும் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜகவின் ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2 வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை   தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 



  • Dec 02, 2024 10:39 IST

    ஏற்காட்டு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்!

    கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 50 அடி நீளத்திற்கு சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.



  • Dec 02, 2024 10:33 IST

    சாலை துண்டிப்பு

    கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காட்டாறு போல் பாய்ந்த வெள்ளத்தில் சாலைகள் சேதம் அடைந்ததால் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது.



  • Dec 02, 2024 09:57 IST

    ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    அதி கனமழை பாதிப்புக்குள்ளான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.



  • Dec 02, 2024 09:22 IST

    தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

    தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Dec 02, 2024 09:19 IST

    வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 02, 2024 09:18 IST

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

    கடலூர் மாநகராட்சியில் 7 இடங்களைச் சேர்ந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • Dec 02, 2024 08:58 IST

    குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்த நிலையில் மீட்புப் பணிகளில் மாநில பேரிட மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Dec 02, 2024 08:53 IST

    வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதம் தேவை

    தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவை செயலாளருக்கு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.



  • Dec 02, 2024 08:19 IST

    சாலைகளில் ஓடும் வெள்ள நீர்

     கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 



rain news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment