ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் வராது- நிதியமைச்சர்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஸ்விக்கி, ஸோமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது: தேர்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காவல் நிலைய பெயர் பலகை- டிஜிபி உத்தரவு
காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது. இதனால் விளம்பரதாரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்றி புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: அமைச்சர்
கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியத்தை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழனத்திற்கு பெருமை என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
தேவைப்பட்டால் கோவையைப் போல் சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் கூறினார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிப்பெயர்ப்பு செய்ததற்காக, தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக தகவல் வௌியாகியுள்ளது. தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
முதலமைச்சரை மாற்ற வேண்டுமென பஞ்சாப் காங். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி 6 மாதங்களுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி புதிய அனுமதியை பெற தென்மண்டல பசுமை தீர்பாயம் கூறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 3 பேருக்கு ஆண்ட்ராய்டு மொபைல்போன் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. வேண்டுமென்றே ஆளுநர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தான் வெளியூரில் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் நேற்று அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவுக்கு சொந்தமான 6 ஜே-16 ரக போர் விமானங்கள், 2 ஜே-11 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் உடனடியாக போர் விமானங்களை அனுப்பி வைத்து சீன போர் விமானங்களை துரத்தியடித்ததாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது.
ராணுவத்திற்கு கூடுதலாக 9 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிட உள்ளதாக தைவான் அறிவித்த சில மணி நேரங்களில் தைவான் வான் எல்லைக்குள் சீனா நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகத்தில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் விளையாடுகிறது. இதில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டூப்ளசிஸ் களம் காண்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட காயம் இதற்கு காரணமாகி உள்ளது
இது குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “டூப்ளசிஸ் தற்போது குவாரன்டைனில் உள்ளார். அது முடிந்ததும் அவரது உடல் திறன் பரிசோதித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும். இருந்தாலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்போதைக்கு இது குறித்து கவலை ஏதும் கொள்ள தேவையில்லை” என அவர் சொல்லியுள்ளதாக இன்ஸைட் ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை), புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.” சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“ஒரு தேர்வு உங்கள் உயிரைவிட பெரியது இல்லை” – சூர்யா
“தற்கொலை செய்து கொள்வது நெருக்கமானவர்களுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் தண்டனை. எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்கு பிறகு குறைந்துவிடும். சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு, உங்களை புரிந்து கொள்வதற்கும், நேசிப்பதற்கும் நிறைய பேர் இருக்கிறோம்.” என மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் நடிகர் சூர்யா அறிவுறுத்தல்.
Actor @Suriya_offl 's request to students and youth..”Suicide is a life-long punishment one gives to near and dear ones.. “#neet pic.twitter.com/cUKSP1Dhdj
— Ramesh Bala (@rameshlaus) September 18, 2021
தெலுங்கானாவின் வாரங்கல்லில் நடைபெற்று வரும் தேசிய ஓப்பன் தடகள சாம்பியன் போட்டியின் கலப்பு தொடர் ஓட்டப்பிரிவில் தமிழகம் தங்கப்பதக்கம் வென்றது
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் சாந்து என பெயரிடப்பட்ட புயல் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இந்த புயலால் மணிக்கு 67 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், நாகசாகி, புகுவோகா மற்றும் சாகா ஆகிய மாகாணங்களில் 5 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
புயலை முன்னிட்டு ஜப்பானின் ஷிகோகு மற்றும் கியூஷு ஆகிய தீவுகளின் தென்மேற்கு பகுதிகளில் மொத்தம் 49 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள
ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே காய்ச்சல் வந்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காபூலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்ததற்கு, அமெரிக்க ராணுவ உயரதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் பதிலடி தாக்குதலின் போது, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் கிடைத்ததால், ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது
தமிழில் “வணக்கம்” என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி பேச தொடங்கினார். “பாரம்பரிய பண்பாடு கொண்ட தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றது பெருமை அளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவேன்” என கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொண்டார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்துகொண்டார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 33,798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 281 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,369க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ராஜ் பவனில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10:30 மணிக்கு பதவியேற்றுக்கொள்கிறார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.