/indian-express-tamil/media/media_files/2025/07/08/ravikumar-selvaperunthagai-2025-07-08-05-58-05.jpg)
Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 08, 2025 05:49 IST
முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு ஏன்? வி.சி.க எம்.பி கேள்வி
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க மூத்தத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் மூலவர் விமானத்தில் நன்னீராட்டு செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகைக்கு "மேலே செல்ல இடமில்லை" எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர் மூலவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், புனித நீரை ஊற்றுவதற்கு முன்பாக கொடியை சட்டமன்ற உறுப்பினரிடம் தராமல் அறநிலையத் துறை அதிகாரிகளே அசைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அறநிலையத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கையும் கேள்விக்குள்ளாக்கினார். "யார் யாரைக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜனை அனுமதித்துவிட்டு என்னை ஏன் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை" எனக் குறிப்பிட்ட அவர், 24 மணி நேரமும் உழைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக நின்று நிகழ்வைப் பார்த்ததாகக் கூறினார். "அதிகாரிகள் தங்களை அதிகாரிகளாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் இங்கு பிரச்சனை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? என்பதை அறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் 'வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Jul 07, 2025 21:58 IST
சி.பி.ஐ இயக்குநரை ஏன் சி.ஜே.ஐ நியமனம் செய்ய வேண்டும்? துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்
மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ) இயக்குநர் போன்ற நிர்வாகப் பிரிவு அதிகாரிகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பங்களிப்புடன் நியமிக்கும் நடைமுறை தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். "நிர்வாகப் பிரிவு அதிகாரியை ஏன் நீதித்துறை நியமனம் செய்ய வேண்டும்? அரசியலமைப்பின் கீழ் இது சாத்தியமா? உலகில் எங்காவது இது நடக்கிறதா?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
-
Jul 07, 2025 21:54 IST
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசல் - அதிகாரிகள் விசாரணை
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தரமணி - சதாசிவம் பிரதான சாலையில் திடீரென மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், மக்களிடையே அச்சமும் நிலவியது. அருகிலுள்ள இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருவதும், அடித்தளம் அமைப்பதற்காக ஆழமான பள்ளம் தோண்டி கனரக இயந்திரங்கள் மூலம் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்ததும் இந்த விரிசலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சுமார் 150 அடிக்கும் மேல் ஏற்பட்ட இந்த நீண்ட விரிசல் காரணமாக, சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jul 07, 2025 21:51 IST
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு
மதுரை மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான ஒன் – டூ- ஒன் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
-
Jul 07, 2025 20:42 IST
ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை திண்டிவனத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், அதேநாளில் சென்னையில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
-
Jul 07, 2025 19:59 IST
த.மா.பி.எஸ்.பி கொடியில் யானை சின்னம்: புதிய கட்சியை எதிர்த்து வழக்கு தொடர்வோம் - ஆனந்தன்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்குத் தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையில், த.வெ.க தரப்பு ஒரு புதிய வாதத்தை முன்வைத்துள்ளது. இந்த வாதத்தைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி மற்றொரு புதிய கட்சியை எதிர்த்தும் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று (ஜூலை 7, 2025) விசாரணைக்கு வந்தது. அப்போது த.வெ.க தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தில், "சமீபத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியின் கொடியிலும் யானை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னம் பயன்படுத்த உரிமை இருந்தால், அவர்களும் இந்த புதிய கட்சிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வாதம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்பவர் தொடங்கியுள்ள 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி' எங்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதுடன், எங்கள் கட்சியின் முக்கிய அடையாளமான யானை சின்னத்தையும் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. எங்கள் கட்சியின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி மக்களைக் குழப்பும் வகையில் செயல்படும் அந்தக் கட்சியை எதிர்த்து விரைவில் வழக்கு தொடர உள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
Jul 07, 2025 19:30 IST
நியூசிலாந்து தெற்குப்பகுதி தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தெற்குப்பகுதியை சேர்ந்த தீவில், ரிக்டர் அளவில் 6.3 என நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
-
Jul 07, 2025 18:20 IST
இரட்டைமலை சீனிவாசனார் ஏற்றிய சுடரை அணையாமல் பாதுகாக்கும் திராவிட மாடல் அரசு - ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இரட்டைமலை சீனிவாசனார் ஏற்றிய
உரிமைச் சுடரை, திராவிட மாடல் அரசு அணையாமல் பாதுகாக்கும்; கல்வி மூலம் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம்; உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார்” என்று பதிவிட்டுள்ளார். -
Jul 07, 2025 18:14 IST
தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான தகவல் தவறு - கீதா ஜீவன் விளக்கம்
அமைச்சர் கீதா ஜீவன்: “தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான தகவல் தவறு; கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 07, 2025 17:47 IST
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
-
Jul 07, 2025 17:26 IST
சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 17:23 IST
அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: ஸ்டாலின் பதிவு
அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில்; நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! “அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
Jul 07, 2025 17:22 IST
பஹல்காம் தாக்குதல்; இருவருக்கு மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவல்
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை கடந்த ஜூன் 22-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன்படி பஹல்காமின் பட்கோலே பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஹல்காமின் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பர்வேஸ் மற்றும் பஷீர் ஆகியோர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
Jul 07, 2025 17:10 IST
'டிமான்ட்டி காலனி 3' - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பணி
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டிமான்ட்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய இரு பாகங்களை விட 3-ம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இது இந்த படத்தின் கடைசி அத்தியாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jul 07, 2025 17:07 IST
11ம் தேதி தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறை பயிற்சி
சென்னையில் ஜூலை 11ம் தேதி தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறை பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் டெண்டர் நடைமுறை (GeM போர்டல்) பயிற்சி, வரும் ஜூலை 11ம் தேதி (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் பயிற்சி நடைபெறும் நடைபெறுகிறது.
-
Jul 07, 2025 17:06 IST
வீட்டிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம்
இனி வீட்டிலேயே பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறைகளை முடித்து கொள்ளும் புதிய திடடம் அமலுக்கு வந்துள்ளது. வீடு தேடி வரும் பாஸ்போர்ட் வாகனம்; புதிய நடைமுறை அறிமுகமானது
-
Jul 07, 2025 16:47 IST
10 துறைகளின் செயல்பாடுகள் - தொடர் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின்
10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் 4 மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர்கல்வி, ஐ.டி., பள்ளிக்கல்வி உட்பட 10 துறை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. புதிதாக உருவான 6 மாவட்டங்களில் விளையாட்டு வளாகம், கட்டுமான பணி குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்துக்குள் விரைவாக முடிக்க முதல்வர் அறிவுறுத்தினார்
-
Jul 07, 2025 16:44 IST
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
காணாமல் போன மீனவ படகு குறித்து இலங்கை கடற்படைக்கு மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தகவல் அனுப்பியது. இதையடுத்து இலங்கை கடற்படை சார்பில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
Jul 07, 2025 16:20 IST
பத்மநாபசுவாமி கோவிலுக்குள் ஸ்மார்ட் கிளாஸ் அணிந்து வந்த நபர் கைது
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 66 வயதான சுரேந்திர ஷா என்பவர், கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கேமராவுடன் கூடிய 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் கண்ணாடியை அணிந்து கோவிலுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை பார்த்து சந்தேகமடைந்த கோவில் ஊழியர்கள், அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த கண்ணாடியில் கேமரா பொறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பத்மநாபசுவாமி கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடிகள் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவில் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார், சுரேந்திர ஷா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
Jul 07, 2025 16:12 IST
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் - அரசிதழில் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 16:08 IST
9 -ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு
நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 16:07 IST
அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி
அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது.
-
Jul 07, 2025 16:02 IST
அரசு மரியாதையுடன் வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்
பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடல்நலக் குறைவால் கடந்த 4ம் தேதி சென்னையில் காலமானார்.
-
Jul 07, 2025 15:49 IST
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் மீது நாளை உத்தரவு
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் மீது நாளை (ஜூலை 7) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
Jul 07, 2025 15:44 IST
பராமரிப்பு பணிகள் எதிரொலி - ரயில் சேவையில் மாற்றம்
கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, ஜூலை 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 26 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், காலை 9:15 மணி முதல் மாலை 3:15 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டு, சூலூர்பேட்டை இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 15:16 IST
ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 7) தலைமைச் செயலகத்தில் முக்கிய அரசு துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Jul 07, 2025 15:06 IST
தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்ஜெட், நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 14:51 IST
அங்கன்வாடிகள் மூடப்படுவதாக பரவிய தகவல் தவறானது - அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்
தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடிகள் மூடப்படுவதாக பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 54,483 அங்கன்வாடி மையங்களும் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 07, 2025 14:20 IST
பெரியார் கூறிய அனைத்து கொள்கைகளையும் த.வெ.க ஏற்கிறதா? - சீமான் கேள்வி
பெரியார் கூறிய அனைத்து கொள்கைகளையும் த.வெ.க ஏற்கிறதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, தமிழ் மொழி குறித்த பெரியாரின் கருத்துகள், தமிழ் இலக்கியங்கள் குறித்த பெரியாரின் பார்வை போன்ற அனைத்து கொள்கைகளிலும் த.வெ.க உடன்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தங்கள் கட்சிக்கும், த.வெ.க-விற்கும் நிறைய கொள்கை முரண்பாடுகள் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 07, 2025 13:55 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 07, 2025 13:32 IST
டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலை செய்துவிடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
டெல்லியில் அரசு பங்களாவை அடுத்த 2 வாரத்தில் காலை செய்துவிடுவேன் என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நிலையில் அரசு பங்களாவில் சந்திரசூட் தங்கியுள்ள நிலையில் காலைசெய்ய உச்சநீதிமன்ற நிர்வாகம் வலியுறுத்தியது.
-
Jul 07, 2025 13:03 IST
14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ்
14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவக் கல்லூரி முதல்வர்களை முறையாகவும் நியாயமாகவும் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
-
Jul 07, 2025 13:02 IST
நாளை நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம்..!!
மக்களவைக்கான நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாளைய கூட்டத்தில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
-
Jul 07, 2025 12:43 IST
அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் மனு தள்ளுபடி..!!
வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் மனு தாக்கல் செய்தார். 2021 தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து ஆண்டி அம்பலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் மனு தள்ளுபடி ஆனது.
-
Jul 07, 2025 12:17 IST
ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் வேலைநிறுத்தப் போராட்டம்: தொமுச தொழிற்சங்கம்
ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்கும். தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பேருந்து,, ஆட்டோர் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் நாளை மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்காது எனவும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்தது.
-
Jul 07, 2025 12:08 IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
Jul 07, 2025 11:44 IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வீடுகள்-முதல்வர் திறப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூர், விழுப்புரம், சேலம், விருதுநகரில் ரூ. 38.76 கோடியில் 729 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
-
Jul 07, 2025 11:41 IST
ஹெல்மெட் தயாரிப்பு- பி.ஐ.எஸ் தரச்சான்று கட்டாயம்
பி.ஐ.எஸ் தரச்சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Jul 07, 2025 11:14 IST
கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
Jul 07, 2025 11:13 IST
அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. மோசடி எதுவும் நடைபெறவில்லை, அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 10:42 IST
பிரசாத் மருத்துவமனையில் அனுமதி
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்துக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jul 07, 2025 10:41 IST
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஜூலை 15 தொடங்க உள்ள நிலையில், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 53 திட்டங்களுக்கான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 10:36 IST
விடுதிக்கு வரலாற்று சிறப்புமிக்க பெயர்: அன்பில் மகேஸ்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர் வைக்கப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்த முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Jul 07, 2025 10:18 IST
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்
நில மோசடி புகாரில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரமோஷனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ்பாபு-வுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் நடிகர் மகேஷ்பாபு-வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 10:09 IST
போக்குவரத்து போலீஸ் ஆயுதப் படைக்கு மாற்றம்!
வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் சென்னை கோடம்பாக்கம் போக்குவரத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியும், அவருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஐயப்பனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 07, 2025 10:08 IST
எலான் மஸ்க் கட்சி - டிரம்ப் விமர்சனம்
அமெரிக்காவில் இரு கட்சி முறைதான் இருந்து வருகிறது, 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை அதிகரிக்கும் என்றும், கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அது அபத்தமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
Jul 07, 2025 10:04 IST
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
2025-26ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இந்தாண்டு கலந்தாய்விற்கு 2.41 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 1.90 லட்சம் இடங்களுக்கு கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது. இன்றும், நாளையும் அரசுப் பள்ளியில் படித்த சிறப்புப் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ள (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
-
Jul 07, 2025 10:03 IST
"சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு" -முதலமைச்சர்
பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்! என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Jul 07, 2025 09:41 IST
பஹல்காம் தாக்குதல் - பிரிக்ஸ் தலைவர்கள் கண்டனம்
பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தில், பிரிக்ஸ் தலைவர்கள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் "பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம், பயங்கரவாத நிதியுதவி மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட" அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தப் பிரகடனத்தில் எந்தப் பெயர்களும் இல்லை என்றாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதக் குறிப்பு பாகிஸ்தானை இலக்காகக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் "இந்தியாவின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான நேரடித் தாக்குதல்" என்று கூறினார். "தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காக" "பயங்கரவாதத்திற்கு மௌனமாக ஒப்புதல் அளிப்பது, பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகளை ஆதரிப்பது" எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்றும், "பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது" என்றும் கூறினார்.
-
Jul 07, 2025 09:22 IST
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. “ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும். தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். காயத்தின் ஆழத்தை பொறுத்து 3 வகைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.