/indian-express-tamil/media/media_files/2025/05/15/RUlpz9jrnWTmq36ayJKv.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 12, 2025 06:21 IST
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியானது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டது.
ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் தெரிகிறது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவாகி உள்ளது.
-
Jul 11, 2025 22:25 IST
உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது - ஸ்டாலின்
மைக்கேல் என்பவர் எக்ஸ் தளத்தில், தி.மு.க தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் ஆ.சக்திவேல் என்பவர் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்பதிவிட்டிருப்பதாவது: “தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!
சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
— M.K.Stalin (@mkstalin) July 11, 2025
எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான்… https://t.co/FMP8JWzgy1 -
Jul 11, 2025 21:48 IST
கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி.. ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் - தலை வணங்கிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், "வேள்பாரி" நாவல் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், தமிழ் மக்களின் கலை ரசனையைப் பாராட்டி, அவர்களுக்குத் தலை வணங்குவதாகத் தெரிவித்தார்.
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி.. அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஹேட்ஸ் ஆஃப்.. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்" என்று உருக்கமாகக் கூறினார்.
-
Jul 11, 2025 21:43 IST
“அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது.. அவர்கள் தான் தூண்கள்” - நடிகர் ரஜினிகாந்த்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்குமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட” என்று பேசினார். -
Jul 11, 2025 21:04 IST
அடுத்த கனவுப் படம் 'வேள்பாரி'; சென்னையில் நாவல் வெற்றி விழாவில் இயக்குநர் ஷங்கர் பேச்சு
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தனது அடுத்த கனவுப் படம் குறித்து சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். எழுத்தாளர் சு. வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவல் வெற்றிப் பெருவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், "எந்திரன் என்னுடைய கனவுப் படமாக இருந்தது. தற்போது 'வேள்பாரி' கனவுப் படமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2025 20:58 IST
ஜெயகாந்தனின் இந்த புத்தகத்தைப் படித்து 3 நிமிடங்கள் அழுதேன் - நடிகர் ரஜினிகாந்த்
மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் வேள்பாரி நூல் 1 லடம் பிரதிகளைக் கடந்து விற்பனையாவதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு: “ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்; யாருக்காக அழுதான் என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு 3 நிமிடங்கள் அழுதேன்” என்று பேசினார்.
-
Jul 11, 2025 20:11 IST
நாளை குரூப் 4 தேர்வு; தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது டி.என்.பி.எஸ்.சி
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை TNPSC வழங்கியுள்ளது.
-
Jul 11, 2025 20:07 IST
சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் பழைய இரும்பு குடோனில் தீவிபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 11, 2025 19:37 IST
புதுச்சேரியில் புதிய நியமன எம்எல்ஏ-க்கள் நியமனம்
புதுச்சேரியில் பா.ஜ.க-வை சேர்ந்த 3 நியமன எம்.எம்.ஏ-க்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். இதையடுத்து, புதிய நியமன எம்.எல்.ஏ-க்களாக தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், ஜூலை 14ம் தேதி புதிய நியமன எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர்.
-
Jul 11, 2025 18:37 IST
பெண் வழக்கறிஞர் வீடியோ- இணையதளங்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு
பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அத்தனை இணைய தளங்களையும் முடக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க மத்திய அரசுக்கு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வீடியோக்களை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நீக்க இயலாது. பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சம்பந்தப்பட்ட இணைய தளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. இந்தநிலையில், பெண் வழக்கறிஞர் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அத்தனை இணைய தளங்களையும் முடக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
-
Jul 11, 2025 18:13 IST
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு; வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
த.வெ.க கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை அக்கட்சி திரும்ப பெற்றது. பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால், அதை சாதகமாக்கி கொள்வோம். பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளோம் என பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது
-
Jul 11, 2025 17:55 IST
லோகேஷ் மீது கோபத்தில் உள்ளேன் - சஞ்சய் தத்
நடிகர் விஜய்யுடன் படம் பண்ணியிருக்கேன், எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேல் எனக்கு கோபம் இருக்கு. லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காமல் என்னை வீணடித்து விட்டார் என பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் கூறியுள்ளார்
-
Jul 11, 2025 17:36 IST
திருமலா பால் மேலாளர் தற்கொலை? குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை விவகாரத்தில் கையாடல் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியதால் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 11, 2025 17:11 IST
மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரள்வோம் - ஸ்டாலின் பதிவு
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள்தொகை தினத்தையொட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது;
உலக மக்கள்தொகை தினத்தன்று, மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்;
*மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது
*பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது
*அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது
*நிலையான வளர்ச்சியை வென்றுள்ளதுஆனால், நமக்கு என்ன கிடைக்கும்? குறைவான இடங்கள். குறைவான நிதி. நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் குரல். ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அது டெல்லியை அச்சுறுத்துகிறது.
இன்னும் மோசமானது பழனிசாமியும், அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள். அவர்கள் நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும் நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை ஆதரிக்கிறார்கள்.
ஆனால் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: தமிழ்நாடு தலைவணங்காது. நாம் ஒன்றாக நிற்கிறோம். இது ஓரணி vs டெல்லி அணி. நமது மண், மொழி, மானம் பாதுகாக்க ஓரணியில் திரள்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2025 16:44 IST
சென்னையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
சென்னை மணலி நெடுஞ்சாலையில் கண்ணாடிகள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரியில் இருந்து விலை உயர்ந்த கண்ணாடிகள் சாலையில் விழுந்து நொறுங்கின. சென்னை துறைமுகத்தில் இருந்து மாதவரம் நோக்கி சென்றபோது சாலை வளைவில் விபத்து ஏற்பட்டது.
-
Jul 11, 2025 16:34 IST
தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா ஏற்பு
தெலங்கானாவின் கோஷாமஹால் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Jul 11, 2025 16:10 IST
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆனால், தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பேருந்து கதவில் ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், 'டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் கசியவில்லை. அதனால் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்தில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
Jul 11, 2025 15:50 IST
உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: ஸ்டாலின்
உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கண்ணியத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி என நிலையான வளர்ச்சியில் சாம்பியன்கள் ஆனாலும், நமக்கு என்ன கிடைத்தது?
நமக்கு கிடைத்தது குறைவான இடங்கள், குறைவான நிதி, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு குரல் மட்டுமே. ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்ததால் அது டெல்லியை அச்சுறுத்துகிறது.
இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் ஈபிஎஸ்-ம் அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள்- ஸ்டாலின் -
Jul 11, 2025 15:47 IST
பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து விலகல்
தெலங்கானா: பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து விலகியதை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைமையிடம் அறிவிப்பு
-
Jul 11, 2025 15:38 IST
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருமலா பால் நிறுவன மேலாளர் பணமோசடி விவகாரத்தில் தற்கொலை செய்த விவகாரம் - மாதாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
-
Jul 11, 2025 15:25 IST
தேர்தல் ஆணையம் தயக்கம் ?
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போலத் தெரிகிறது -சென்னை உயர்நீதிமன்றம்
-
Jul 11, 2025 15:24 IST
புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சித்தநாத சுவாமி கோயில் கோயிலில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
-
Jul 11, 2025 15:12 IST
நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் பரவலை அடுத்து கேரளாவிலிருந்து தமிழகம் வரும் 20 வழிகளிலும் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை தீவிரமாக சோதனை செய்ய அறிவுறுத்தல்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
Jul 11, 2025 14:26 IST
என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்- ராமதாஸ்
என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது."
-விருதாச்சலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
-
Jul 11, 2025 13:33 IST
பா.ஜ.க-வை தூக்கி சுமக்கும் பாரம் தாங்காமல் இ.பி.எஸ் பிதற்றத் தொடங்கியுள்ளார் - அமைச்சர் சிவசங்கர்
பா.ஜ.க-வை தூக்கி சுமக்கும் பாரம் தாங்காமல் எடப்பாடி பழனிசாமி பிதற்றத் தொடங்கியுள்ளார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, "எடப்பாடி பழனிசாமி, விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அவரது தோளில் பா.ஜ.க அமர்ந்து கொண்டு, அவர்களது கொள்கைகளை இவர் பேசுகின்ற சூழலில் கொண்டு வந்து விட்டனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2025 13:02 IST
சீமான் நடத்திய மாநாடு குடி பெருமையின் உச்சம் - வன்னி அரசு
சீமான் நடத்திய ஆடு, மாடுகள் மாநாடு குடி பெருமையின் உச்சம், சாதி வெறியின் எச்சம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மாடுகளை மேய்ப்பதும், பனை ஏறுவதும் காலங்காலமாக தொழில் செய்வோரே செய்ய வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jul 11, 2025 12:30 IST
ஜெயலலிதா குறித்து வைகோவின் கருத்துக்கு ஜெயக்குமார் கண்டனம்
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தாம் செய்த மிகப்பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தது தான் என்று கூறியதற்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "வைகோவை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும். ஆனால், அவர் நன்றி மறந்து விட்டார். அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த பிறகு தான் ம.தி.மு.க-விற்கு அங்கீகாரமே கிடைத்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 11, 2025 12:15 IST
இன்னும் 9 மாதங்களில் தி.மு.க அரசுக்கு முடிவுரை எழுதும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி
பா.ம.க தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், "இன்னும் 9 மாதங்களில் தி.மு.க அரசுக்கு முடிவுரை எழுதும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க-வின் 37 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் விதமாக இந்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
-
Jul 11, 2025 11:43 IST
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்
75 வயதானால் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பரில் 75 வயதாகும் நிலையில் மோகன் பகவத் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்ற நிலையில் அந்த விதி பிரதமர் மோடிக்கும் பொருந்துமா என சிவசேனா உத்தவ் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி 2029 ஆம் ஆண்டு வரை பிரதமராக நீடிப்பார் என ஏற்கனவே பாரதிய ஜனதா கூறியுள்ளது.
-
Jul 11, 2025 11:09 IST
பா.ம.க சேரும் அணி மிகப்பெரிய வெற்றி பெறும் - ராமதாஸ்
பாமக எந்த அணியுடன் சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெரும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jul 11, 2025 10:40 IST
டெய்லர் ராஜாவிற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
டெய்லர் ராஜாவிற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி வெர்ஜின் வெஸ்டா உத்தரவிட்டுள்ளார். 1998 கோவை குண்டு வெடிப்பு, 1996ல் ஜெயிலர் பூபாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர் டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் டெய்லர் ராஜா கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 11, 2025 10:37 IST
3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பு விண்ணப்பம் - ஜூலை 25 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.tndalu.ac.in வாயிலாக ஜூலை 25 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
Jul 11, 2025 10:00 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு
ஆபரண தங்கம் சவரன் ரூ.72,600க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.9,075க்கு விற்பனை
-
Jul 11, 2025 09:59 IST
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்"
-
Jul 11, 2025 09:59 IST
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை தொடங்குகிறது டெஸ்லா நிறுவனம்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15-ந் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே, சுமார் 4000 சதுர அடியில், டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது,
-
Jul 11, 2025 09:56 IST
ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்.
-
Jul 11, 2025 09:22 IST
230 முறை சூரிய உதயம் பார்த்த சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் 230 முறை சூரிய உதயத்தை பார்த்துள்ளதாக நாசா தகவல். சுமார் ஒரு கோடி கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாகவும் அறிவிப்பு
-
Jul 11, 2025 09:21 IST
34 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் 34 உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது, இதன் மூலம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
-
Jul 11, 2025 08:29 IST
தமிழகத்தில் இனி ஆன்மிக ஆட்சிதான் அமையும்: அண்ணாமலை
தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆன்மிக ஆட்சிதான் அமையும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2025 07:55 IST
இஸ்ரேல் தாக்குதல் - குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
காசாவில் மருத்துவ முகாம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 பேர் பலி. உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தை பார்த்து கதறி அழுத பெற்றோர்
-
Jul 11, 2025 07:55 IST
"3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை"
தமிழகத்தில் நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 11, 2025 07:54 IST
ஓஜி கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை, ஏழுகிணறு அருகே ரூ.15 லட்சம் மதிப்பிலான ஓஜி கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
-
Jul 11, 2025 07:16 IST
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.