scorecardresearch

News Highlights : கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத்தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்

யாஸ் புயல் பாதிப்பு: 3 மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிவாரணம்

யாஸ் புயல் காரணமாக கடும் பாதிப்புகளைச் சந்தித்த ஒடிசாவுக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ரூ.500 கோடியும் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

400 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கருப்புப் பூஞ்சை நோய்க்கு 400பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார். இந்த நோய் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க 13 பேர் கொண்ட மருத்துவக் குழுவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்துள்ளளது.

கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

பழைய முறையிலேயே தேர்வு நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத்தேர்வு அடிப்படையிலேயே இருக்கும். நடப்பு செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7க்குள் விண்ணப்பித்து ஜூன் 12க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2 டிஜி கோவிட் தடுப்பு மருந்து விலை ரூ.990 ஆக நிர்ணயம்

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான பொடி வடிவிலான கோவிட் தடுப்பு மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவிட் தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க 2 டிஜி எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Live Updates
20:16 (IST) 29 May 2021
பிரதமர் மோடியின் உத்தரவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும் பிரதமர் மோடியின் உத்தரவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

20:16 (IST) 29 May 2021
திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

19:08 (IST) 29 May 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2039716 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 486 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 23261 ஆக உயர்ந்துள்ளது.

18:14 (IST) 29 May 2021
பிரதமர் அலுவலகம் நிதியுதவி அறிவிப்பு

தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் நிதியுதவி அவர்கள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ₹10 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

17:47 (IST) 29 May 2021
கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திருப்பூரில் ஆய்வு செய்த அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

15:39 (IST) 29 May 2021
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி- கமலஹாசன் பாராட்டு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

15:16 (IST) 29 May 2021
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14:41 (IST) 29 May 2021
தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சைக்காக பிரமாண்ட சிகிச்சை மையம்

தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சைக்காக பிரமாண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையமாக இது இருக்கும் என தகவல்

14:26 (IST) 29 May 2021
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மலையை சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது இதன் நீர்மட்டம் 67 அடியை எட்டியுள்ளது.

14:04 (IST) 29 May 2021
ஐ.பி.எல். போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும்

இந்த ஆண்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் அமீரகத்தில் தொடர்ந்து நடைபெறும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

14:01 (IST) 29 May 2021
உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்வு

ஜூன் 1ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13%லிருந்து 16%ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13:49 (IST) 29 May 2021
ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அறிவிப்பு

கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரள அரசு ஓ.என்.வி. விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். மீ டூ விவகாரம் தொடர்பாக பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளியிட, ஓ.என்.வி. விருது அளிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக கல்ச்சுரல் அகாடெமி அறிவித்ததை தொடர்ந்து ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.

13:09 (IST) 29 May 2021
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

13:08 (IST) 29 May 2021
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பீடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு செலுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விச் செலவு, விடுதி கட்டணம் அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

12:40 (IST) 29 May 2021
ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மாண்டவியா அறிவித்துள்ளார்.

12:18 (IST) 29 May 2021
மறைந்த நீதிபதி குடும்பத்தினருக்கு நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:16 (IST) 29 May 2021
கோவைக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் #covid19 எண்ணிக்கை அதிகரிப்பதால் மே 30ம் தேதி அன்று கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார் முக ஸ்டாலின். தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் கழக தொண்டர்கள் நேரில் வந்து வரவேற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் #covid19 எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன்.அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்.மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்! pic.twitter.com/byUC8nsuOm— M.K.Stalin (@mkstalin) May 29, 2021
12:12 (IST) 29 May 2021
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே எந்த பிரச்சனையும் இல்லை

பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பிரச்சனை ஏதும் இல்லை. இரட்டை குழல் துப்பாக்கி போல் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

11:34 (IST) 29 May 2021
CAA அமல்படுத்தும் பணி தொடங்கியது

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியது. குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்பில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

11:14 (IST) 29 May 2021
திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோவை பயணத்தின்போது வரவேற்பு ஏற்பாடுகளை தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். ஊரடங்கு காலத்திலும் பசி போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

11:12 (IST) 29 May 2021
ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது

கடந்த ஒரு வார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதாகவும், நோய்த்தொற்று மேலும் குறைய வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

09:58 (IST) 29 May 2021
அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் உயிரிழப்பு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கான்பூர் ஐஐடியின் தலைவராகவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

09:43 (IST) 29 May 2021
இரண்டாது நாளாக 2 லட்சத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,84,601 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

09:30 (IST) 29 May 2021
கருப்பு பூஞ்சையை காப்பீடு திட்டத்தில் சேருங்கள்- ஓபிஎஸ்

கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாகிவிடும்.

எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

09:26 (IST) 29 May 2021
நடிகர் சுபா வெங்கட் கொரோனாவால் உயிரிழப்பு

நடிகர் சுபா வெங்கட் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார்.யுடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

Web Title: Tamilnadu news today live update black fungus gst mk stalin corona lockdown extends