தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
ஞாயிறன்றும் ரூ.2,000 நிதிக்கான டோக்கன்
கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக வழங்கப்படவிருக்கும் ரூ.2 ஆயிரத்திற்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமையும் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வாரம் ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயலாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது என கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில், 33 பேர் பலியாயினர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இறந்ததை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரிடையாக பங்கேற்க மாட்டார்’ என, வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி – 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; ‘டெண்டர்’ நடைமுறை துவக்கம்
மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் இன்று முதல் முழுமுடக்கம்
கொரோனா பரவல் காரணமாக தெலங்கானாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்கு ஒரே நாளில் 293 உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த கட்டுமான பணிகளை நிறுத்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறையால் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்சில் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன அவை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.
பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், 2 கோடி தடுப்பூசிகள் வாங்க சர்வதேச டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோருவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதிகளையும் செய்துதர வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு, 7 வருடங்களாக வீட்டில் மூதாட்டியை கவனித்து வந்த கேரள செவிலியர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழகத்தின் கடலூர் மாவட்ட எல்லைகளும், புதுச்சேரி மாவட்ட எல்லையும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து புதுவைக்கு செல்லும் வாகனங்கள் புதுவை போலீசாரால் திருப்பி விடப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு எதிரொலியால், பயணிகள் வரத்து காரணமாக சேலம் – சென்னை இடையே நாளை முதல் 10 நாள்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 14-ல் நீலகிரி, கோவை, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வருகின்ற ஜூன் மாதம் 8ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் பொறுப்புகளை முறையே அப்பாவு மற்றும் பிச்சாண்டி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். பின்பு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மெரினாவில் அமைந்திருக்கும் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் இருவரும் மலர் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு. கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.
டெல்லியில் கடந்த நான்கு வாரத்திற்கும் மேலாக கொரொனா உச்சம் பெற்றிருந்தது. ஏப்ரல் 19ம் தேதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது. கடந்த மாதம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது அது 12 ஆயிரமாக குறைந்துள்ளது. தொற்று விகிதம் 20%க்கும் கீழாக குறைந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 3440 டன் திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என்று உள்த்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் 4205 நபர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர்.
2-18 வயதினருக்கான தடுப்பூசி – 2, 3-ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிரிவ் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அந்த மருந்து வழங்கும் விநியோக மையத்தை மக்கள் முற்றுகையிட்டனர். முற்றுகையில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி காவல்துறையினர் அந்த பகுதியில் மீண்டும் அமைதிக்கு கொண்டு வந்தனர்.
சபாநாயகர் பதவி ஏற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர், துணை சபாநாயகரை வாழ்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர்கள் இன்று உரையாற்றினார்கள்.
தமிழக சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? – மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்
என திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் 3 நியமன எம்.எல்.ஏக்களை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் சென்னை முகப்பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரகோத்தமன் உயிரிழந்தார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்-யும் சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டியும் பதவியேற்றுக்கொண்டார்.
ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
செவிலியர்களுக்கு ரூ.20ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலான பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கில்லி, டிஸ்யூம், தலைநகரம் போன்ற படங்களில் மாறன் நடித்துள்ளார்.