தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
பக்ரீத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்வு -கேரள அரசு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் வசிக்கும் முஸ்லீம் மக்களுக்காக ஊரடங்கில் 18,19, 20 ஆகிய மூன்று நாட்களுக்கு சில தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
கொரோனா : அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை என டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். நமது அன்றாட வாழ்வில் தவறாமல் முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தென்மாவட்டத்தில் தொகுதி கேட்டும் கொடுக்காமல், பழிவாங்கும் நோக்கத்தோடு வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சென்னை எழும்பூர் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்கள். நான் அதிமுகவால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களில் திட்டமிட்டு தன்னை தேர்தல் பரப்புரை செய்ய விடவில்லை. பல்வேறு கிராமங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரை செய்து இருந்தால் தென்மாவட்டத்தில் இன்னும் அதிகமான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.தற்போதைய நிலையில் அதிமுகவுடன் உறவு மட்டுமே உள்ளது; கூட்டணி இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம்.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதிமுகவின் இரண்டு தலைமையால் அக்கட்சி அழிவை நோக்கி செல்கிறது. முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டது போல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்யவில்லை என்று ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
கேரளா சபரிமலையில் நாளை முதல் 10,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
பாலியல் புகார் குறித்து மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 2,205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடக்கோரிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதில், தமிழகத்தில் இதுவரை 1,76,19,174 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, 7,15,570 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதிமுக ஆட்சியில் தினமும் 61,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது திமுக ஆட்சியில் தினமும் 1, 61,297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை மாற்று இடத்தில் போராட்டம் நடத்தக்கோரி காவல்துறை நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஜூலை 22 முதல் நாடாளுமன்றம் முன்பு போரட்டம் நடந்த இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
மழையால் விளைபொருட்கள் வீணாவதை தடுக்க, நேரடி கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்கலாம் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயரை நீக்குவது தொடர்பான விவகாரததில், இறப்பு சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றமும்தான் முடிவெடுக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளர்.
அனகாபுத்தூர் அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
திரையரங்கு வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயர்த்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த கோரிக்கையை ஏற்றால், அது பொதுநல வழக்கிற்கு எதிரானது என்றும், அரசின் காெள்கை முடிவுகளின் தலையிட முடியாது என்றும், நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன் தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் 3ம் அலை உருவாகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது.
2021ம் ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்
கொரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறியுள்ளார்.
’அறிந்தும் அறியாமலும்’, ’பட்டியல்’, பில்லா, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன், தற்போது பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரது பதவியை ராஜினாமா செய்யய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது நான்கு லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிதுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்துள்ளது. பதவி விலகல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடியூரப்பா முறையான பதிலளிக்கவில்லை. மேலும் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து முகக்கவசம் அணிபவர்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. இதில் சென்னையில் வசிக்கும் மக்களில் 50% பேர் இன்னமும் முகக்கவசம் அணிவது இல்லை என ஆய்வு தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. http://www.pondiuniv.edu.in -ல் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.215ஆக உயர்ந்துள்ளது. முன்பு 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.
டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,336 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட மேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா வழக்கு தொடர்பாக விசாரிக்க பள்ளி ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆசிரியைகள் தலைமறைவாகியுள்ளனர்.
இந்தியாவில் மேலும் 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,091 ஆக அதிகரித்துள்ளது.