அரக்கோணம் இரட்டை கொலை : போதை வெறியர்கள்தான் காரணம் – பூவை ஜெகன்மூர்த்தி

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை சாதிய மோதலால் நடந்தது அல்ல என்று புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை ஜென்மூர்த்தி கூறியுள்ளார்.

அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் முன்விரோதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு சாதிய மோதலோ அல்லது அரசியல் மோதலோ காரணம் இல்லை என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில தொகுதிகளில் தொண்டர்களிடையே மோதல் போக்கு இருந்தாலும், தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் (ஏப்ரல் 7)  அரக்கோணம் அருகேயுள்ள கௌதம நகர் அர்ஜுனன், சூர்யா என்ற 2 இளைஞர்கள் அப்பகுதியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கொல்லப்பட்ட இளைஞர்களின் சமூகத்தினர் போர்கொடி தூக்கினார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் தாலுகா போலீசார், இதுவரை 6 பேரை கைது செய்துள்ள நிலையில், இருப்பிரிவினர் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை தான் இந்த மோதலுக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “தேர்தல் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கிறது. இதற்கு அ.தி.மு.க, பா.ம.க தான் காரணம்’’ என்று தனது தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினும், இந்த சம்பவத்திற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

ஆனால் எதிர்கட்சி தலைவர்களின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க, பா.ம.க தரப்பினர், குடிபோதையில் இருத்தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தை சாதி கலவரமாக மாற்றி அமைதியாக வாழும் இரு சமூகத்துக்குள் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக தங்களது தரப்பு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறுகையில்,

இந்தச் சம்பவம் குறித்து ஊர் மக்களிடம் நேரில் சென்று விசாரித்தேன். சாதி பிரச்னையால் இந்த இரட்டை கொலை நடந்தது அல்ல அந்த இளைஞர்கள் எப்போதுமே குடித்துவிட்டு பிரச்னை செய்கிறவர்கள் என்கின்றனர். சாராய வெறிகொண்ட இளைஞர்கள் தங்களுடன் 10 பேரை அழைத்துக்கொண்டு இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இதில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பிரச்சனை சாதிய மோதலால் நிகழ்ந்தது அல்ல. சாதி பிரச்னையென்றால் இந்நேரம் ஊரே திரண்டிருக்கும்.

சம்பவம் நடத்த அந்த ஊரில் பா.ம.க கட்சியினரே இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கு இல்லை. அனைத்து சமூகத்தினருமே இணக்கமாக வசிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரித்தபோதுதான் இந்த தகவல் கிடைத்தது. உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசினோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களை சந்திக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபடியும் இந்த பகுதியில் மீண்டும் இதே மாதிரி சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். இந்த இரட்டை கொலைக்கு சாதிய மோதல்தான் காரணம் என சாதி மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட போதை மோதல். இதை அரசியலாக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news update arakkonam double murder case poovai jaganmoorthy

Next Story
News Highlights : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்கியது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com