Tamilnadu News Update : நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வழக்கமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுககு விழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் , குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதேபோல், தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஆளுனர் ஆர்.என்.ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வீர தீர செயல் செய்த பலருக்கும் விருதுகள் வழக்கப்பட்ட நிலையில், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அண்ணா மற்றும் காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுனருக்கு முப்படை மற்றும் தமிழக காவல்துறையின் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் முதல் ஊர்தியாக தமிழக இசைக்கல்லூரி மாணவர்கள நாதஸ்வர இசை மற்றும் முதல்வர் ஸ்டாலின், படத்துடன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஊர்தி சென்றது.
அதனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், மருது சகோதர்கள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பொரியார், காயிதே மிலத், ராஜாஜி, இரட்டை மலை சீனிவாசன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த ஊர்திகள் சென்றன. ஆனால் இந்த அலங்கார ஊர்திகளில் வட தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!
தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “