தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற, 5-வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாடு பங்கேற்ற, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் 22 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று, சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசியிருந்தார்.
அப்போது, “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய வருண்குமார், சைபர் கிரைம், இணையதள குற்றங்கள், மிரட்டல்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கி பேசினார்.
அவரின் இந்த பேச்சு நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பதில் அளித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் ஐ.பி.எஸ் எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடக்கி வைத்த விழாவில் அவர் பேசியது மட்டும் வெளியே வருகிறதே அது எப்படி?.
என் கட்சியை குறை சொல்வதற்கு தான் அவர் ஐ.பி.எஸ் ஆனாரா? மோத வேண்டும் என்று ஆகிவிட்டால் மோதுவோம் வா. உன்னால் என்ன பண்ன முடியும்? என்று ஆவேசமாக பேசினார். அதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சீமான் குறித்து பெரும் வண்மம் மற்றும் காழ்புணர்ச்சியோடு, தனது விருப்பு மற்றும் வெறுப்பு அடிப்படையில், ஐ.பி.எஸ். பதவியை முழுமையாக துஷ்பரயோகம் செய்து, தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்வது, அவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பெண் காவலர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, உள்ளிட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக எங்கள் நிர்வாகிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போன்கள், கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசி, மற்றும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக செயல்வதுவதாக கூறி நெட்ஃபிளிக்ஸ் யூடியூப் சேனல் ஜெரால்ட் கைது செய்யப்பட்டபோது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசி ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தனிப்பட்ட உரையாடல்களை மூன்றாவது நபர்களை வைத்து தொடர்ந்து சமுகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் சீமான் குறித்தும், நாம் தமிழர் கட்சியின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். இது குறித்து அவர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். உரையாடல்கள் வெளியானது தொடர்பான டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும் திமுக அரசிடம் தனது விஸ்வாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, அவர் பொறுப்பில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் எங்கள் கட்சியினர் மீது 8-க்கு மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளார்.
இதைவிட உச்சக்கட்டமாக நேற்று டெல்லியில், நடைபெற்ற மாநாட்டில், நாம் தமிழர் கட்சி குறித்து ஒரு அபத்தமான கருத்தை கூறியுள்ளார். காவல்துறையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் காவலர் வருண்குமார், தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க அனுமதித்தால், தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்துக்களை பரப்புவதை சட்டவிரோத செயல்களை செய்ய முற்படுவார். இது குறித்து காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு ஒரு புகார் மனு அளித்துள்ளோம்.
இந்த புகார் மனுவில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அந்த பதவியில் இருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும். அவர் சட்டம் ஒழுங்கை மேற்பார்வையிடம் வேறு எந்த விதமாக பணிகளிலும் நியமிக்க கூடாது என்றும் நிர்வாக ரீதியிலான பதவியில் மட்டுமே அவர் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். அவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.