/indian-express-tamil/media/media_files/2025/03/12/GbHuV1GIaUsj8KdNXNkP.jpg)
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவரின் கையை பிடித்து ஃபைட் பண்ணிட்டே இருங்கண்ணா, விட்றாதீங்கண்ணா என்று கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களை தன் வைசம் வைத்துள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் நாம் தமிழர் கட்சியில், ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சமீபகாலமாக அவருக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக, சீமான் பெரியார் குறித்து கருத்துக்கள் பேசியதை தொடர்ந்து, அவருக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
அந்த சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் பல பா.ஜ.க தலைவர்கள், சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், சீமான் மற்றும் அண்ணாமலை சந்திப்பு, அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பலரும், சீமான் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளார் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் சீமானுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீமான் நிகழ்ச்சி முடிந்து தனது காரில் வெளியில் வந்த அவரை பார்த்த பா.ஜக. தலைவர் அண்ணாமலை, தனது காரில் இருந்து இறங்கி வந்தார். காரில் அமர்ந்து கண்ணாடியை இறக்கிய சீமான், அவருடன் கைகொடுத்து அன்பை பறிமாறிக்கொண்டார். அப்போது சீமானின் கையை பிடித்த அண்ணாமலை, விட்றாதீங்கண்ணா, ஃபைட் பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா இருங்கண்ணா என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ சமூகவலைளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள், அரசியல் விமர்சர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதனிடையே சீமானிடம் பேசியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, சீமான் அண்ணன் எனக்கு ஒரு நல்ல நண்பர். அரசியலில் ஒரு மனிதன் திராவிட கட்சிகளை எதிர்த்தால் அவருக்கு பலமுனை தாக்குதல்கள் வரும். குறிப்பாக பெரியாரை பற்றி பேசினால் பலமுனையில் இருந்து தாக்குவார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு உள்ளே செல்வார்கள். காவல்துறை அத்துமீறல்கள் நடக்கும். ஒரு மனிதனை தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தால், அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைவார். அதனால் அவரிடம் உங்கள் பாதையில் நீங்கள் போய்க்கொண்டே இருங்கள் என்று சொன்னேன்.
எங்களுக்கும் அவருக்கும் நேர் எதிர் கொள்கைகள் இருந்தாலும், அவர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க குறித்து பல இடங்களில் விமர்சனம் செய்திருந்தாலும், அடிப்படையில் தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளை எதிர்த்து துணிவாக நின்றுகொண்டிருக்கிறார். அதனால் அவர் துணிவாக இருக்க வேண்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். எங்கள் பாதையில், நாங்கள் போகிறோம். ஒரு மனிதனின் தனிப்பட்ட தாக்குதல்கள் அவரை சோர்வடைய செய்யம். அந்தரங்க விஷயங்கள், காவல்துறை வீட்டுக்குள் சென்றது என அனைத்தையும் பார்த்தோம்.
தொடர்ச்சியாக இது நடக்கும்போது மனச்சோர்வு ஏற்படும். அப்போது எதேர்ச்சையாக இந்த கல்யாண நிகழ்வில் அவரை பார்க்கும்போது, தைரியமாக இருங்க, உங்கள் அரசியல் பாதையில் நீங்கள் போய்கிட்டே இருங்கள் என்று சொன்னேன். இது அடிப்படையில் ஒரு அரசியல் நாகரீகம். கட்சிகள் கோட்பாடுகள் வேறு வேறு இருந்தாலும் கூட அவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.