/indian-express-tamil/media/media_files/2025/10/28/seemans-2025-10-28-10-20-37.jpg)
தவெக தலைவர் விஜய், ஒரு கோழை என மறைமுகமாக சாடிய சீமான்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய வீரமிகு மருது பாண்டியர்களது மாவீரத்தை புகழ்ந்து போன்றும் வகையில், திருச்சி திருவெறும்பூர் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் மருது பாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், கார்ட்டூன் குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
பொதுக்கூட்ட மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த விடுதலை போராட்ட தீயாகிகளான பெரிய மருது, சின்ன மருது, தீரன் சின்னமலை, செவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, பழசி கேரள வர்மா, திப்புவின் தளபதி தூந்தாஜிவாக், விருப்பாச்சி கோபால்நாயக்கர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை ஆகியேரது உருவப்படங்களுக்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி 'ஏர் கலப்பையுடன் உழவன் நிற்கும்' சின்னத்தில் வேட்பாளர்களை களம் இறக்கப்போகிறது. அந்த சின்னம் பொரிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து கொண்டும், நமது சின்னம் என்ற வாசகத்தை சுமந்துக்கொண்டும் மேடையில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிவு, செல்வம், பதவி, புகழ் இவற்றையேல்லாம் பாதுகாப்பது வீரம்.
நாட்டில் வாழும் 150 கோடி மக்களையும், எல்லையில் நிற்கும் 15 லட்சம் ராணுவ வீரர்கள் தான் பாதுகாத்து வருகிறார்கள். அந்த வீரர்களின் வீரத்தில் இந்த நிலம் பாதுகாப்பாக இருக்கிறது. அதனால் தான் உலகம் முழுவதும் வீரம் போற்றப்படுகிறது. திரைப்படத்தில் தன்னை எதிர்த்து வரும் 500 பேரையும் பாய்ந்து பாய்ந்து அடித்து வீழ்த்துகிற கதாநாயகர்கள், உங்கள் தளபதிகள் கூட தங்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுங்கள் என்கிறார்கள். அதற்கு காரணம் வீரம் தான். அதனால் தான் வீரத்துறவி விவேகானந்தர், 'வரலாறு வீரர்களுக்கானது. கோழைகளுக்கானது அல்ல' என்கிறார். (தவெக தலைவர் விஜய், ஒரு கோழை என மறைமுகமாக சாடினார்).
மருதுபாண்டியர் உள்ளிட்ட நம் முன்னோர்களை புகழ்ந்து பேசுவது என்பது வாக்குக்காக அல்ல. நமது வருங்கால சந்ததியினரை வழிநடத்துவதற்காக. அன்று, சாதி, மதரீதியாக மக்கள் பிரிந்து கிடந்ததை பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். இன்றும், சாதி, மத ரீதியாக நாம் பிரிந்து கிடந்தால், இங்கும் அந்நியராட்சி தான் நிழவும். அந்நியர் ஆட்சியில் அடிமையாக வாழ வேண்டிய நிலை உருவாகும்.
மருது பாண்டியர்கள் முழக்கம் வைத்தது வெள்ளையர் காலத்தில், நான் முழக்க வைப்பது கொள்ளையர்கள் காலத்தில். அந்தவகையில், மருது பாண்டியர்களும், சீமானும் ஒரே நேர்கோட்டில் நிற்கிறோம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட தமிழ் மன்னர்கள் அனைவரும் எனது அப்பத்தாக்கள், எனது பாட்டன்கள். இன்று, விவசாயிகளின் கடின உழைப்பின் பலனாக, விளைந்த நெல் மணிகளை, கொள்முதல் செய்து, அவற்றை சேமிப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாக்க வக்கில்லாத திராவிட திருடர்களின் அரசு, நெல் மணிகளை தெருவிலே கொட்டி வீணடிக்கிறது.
ஆட்சியாளர்கள் நெல்மணிகளை தெருவில் போட்டது போல, ஆட்சியாளர்களை நாம் தெருவில் தூக்கி எரிய வேண்டும். நீங்கள் வீதியில் நின்று, வரிசையில் நின்று, வாக்கு செலுத்தும் முன்பாக, வீதியில், மழையில் நனைந்து வீணான நெல்மணிகளை நினைத்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தீபாவளி அன்று, ஒரே நாளில் 290 கோடி ரூபாய்க்கு மது குடிக்கிறார்கள். ஒரே நாளில் 290 கோடி ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு, எதற்காக இலவசம் என்ற கேள்வி எழுமா? எழாதா?
தமிழகத்தில் விவசாயிகள் விளைவித்த வாழை, கரும்பு ஆகியவற்றை வேரோடு வெட்டி வந்து வீதி முழுவதும் கட்டுகிறார்கள். இது யாரை வரவேற்க? அற்ப திருட்டு திராவிட பதறுகளை வரவேற்க இந்த வாழையும், கரும்பும் நிற்கிறதா? நீ இந்த மண்ணின் உழவர் குடிக்க கொடுக்கும் மதிப்பு இதுதானா? வேளாண்மை வேளாண் குடிமக்களை போற்றுவது இதுதானா? அல்லது விவசாயிகளின் உழைப்பை எப்படி வீதியில் போடுகிறேன் என்று காட்ட விரும்புகிறாயா?
வீதிகளில் இருபுறமும் மேலே கட்சிக்கொடி, கீழே வாழைத்தார். கூட்டம் முடிந்ததும், வாழைத்தாரை பறித்துக் கொண்டு செல்லும் தன்மான தமிழ் குடிகளை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. மருதுபாண்டியர் கோவில் வளைவுக்கு வெளியே எந்த கட்சி கொடியை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். கோவிலுக்குள் எந்த கட்சிக் கொடியும் கட்டக்கூடாது. அதை மீறி கட்சி கொடிகளை கட்டினால் என் பிள்ளைகள் அதனை பிடுங்கி தூக்கி எறிவார்கள் என்று பேரறிப்பு செய்கிறேன்.
வாழைமரம் கரும்பு இவற்றையெல்லாம் நீ செத்த பின்பு உனது பாடைக்குக் கட்டு. இவற்றையெல்லாம் அங்கு வந்து கட்டாதே. நானும் எனது தம்பிகளும் முதல் நாளே அங்கு சென்று படுத்துக் கொள்ளப் போகிறோம். அங்கு எவனாவது வாழையை வெட்டி வந்து வைத்தால், அவன் கழுத்தில் வாளை வைப்பது என முடிவெடுத்துள்ளோம். சேட்டை பண்ணாதே! என்னை அவமதிக்காதே. இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். வெறிகொண்ட புலிகள் களத்தில் பாயும் காலம். எதிரே வந்து விடாதே!
அன்று நம் முன்னோர்கள் வாள் ஏந்தி நின்றார்கள். இன்று நாம் சொல்லாயுதமும், அறிவாயுதமும் ஏந்தி நிற்கிறோம். அன்று கப்பலில் வந்தவனை விரட்டி அடித்தோம். இன்று வானூர்தியில் வருபவனை வரவேற்று வளர்ச்சி என்கிறார்கள். நம் பாட்டன், பாட்டி காலத்தில் இருந்த ஒரே ஒரு எதிரி வெள்ளையன். இன்று ஓராயிரம் எதிரிகள் உள்ளனர். அவ்வளவு பேரும் கொள்ளையர்கள். அப்படி என்றால் ஓரிரு மருது பாண்டியர்கள் போதாது. நாம் ஒவ்வொருவரும் மருதுபாண்டியர்களாக மாற வேண்டும். நம் அனைவரின் நோக்கமும், 'இனத்தின் விடுதலை' என்ற ஒன்று மட்டும் தான்.
புரட்சி என்ற வார்த்தையும், தளபதி என்ற வார்த்தையும், தமிழகத்திற்குள்ளே சிக்கித் தவிக்கிறது, ராமசாமியை ( தந்தை பெரியாரை) ஏற்றுக்கொண்டு திராவிடம் பேசுபவர்களை தோற்கடிக்க, தமிழர்கள் ஒன்று சேர வேண்டும், அதற்கு, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பேசினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us