நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்துள்ள புகார் தொடர்பான விவகாரம் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளார். அங்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் சீமான் நாளை ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பில், அவரது வீட்டில் சம்மன் ஒட்டியபோது, சீமான் வீட்டு காவலாளிக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரதம்தில், சீமான் வீட்டு காவலாளி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நாளை தன்னால் ஆஜராக முடியாது என்றும் சீமான் கூறியுள்ளார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஒரு அளவுக்கு மேல் குறிப்பாக திராவிட அரசியல் இந்த கருவியை தான் கடைசியாக கையில் எடுக்கும். அரசு பேசி சரி செய்யும் அளவுக்கு இது பெரிய குற்றம் இல்லை. அந்த அம்மா ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இருந்துகொண்டு, பேசினால் ஒன்றும் ஆகாது. நேருக்கு நேராக அமர வைத்து பேச வைக்க வேண்டும். நான் சென்றமுறை விசாரணையில் சொன்னேன். எங்கள் இருவரையும் நேருக்கு நேர் உட்கார வைத்து பேச வைத்தால் அரைமணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறியிருந்தார்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று உறுதியாக நம்புவதாக கூறிய சீமான், இரவு 8 மணிக்கு நான் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான், ஆஜராக உள்ள நிலையில், காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர். கட்சி தலைமையின் சார்பில் அழைப்பு விடுத்ததால், தங்கள இங்கு கூடியிருப்பதாக தொண்டர்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, தொண்டர்கள் காவல் நிலையம் அருகே அனுமதிக்கப்படாததால், தங்களை அனுமதிக்க கோரி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.