Advertisment

அமைச்சர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி!

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர் இராஜ கண்ணப்பனை ஊழல் புகாரிலிருந்து தப்புவிக்க திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

author-image
WebDesk
New Update
NTK Leader seeman on Spirituality lecture in Chennai Govt school controversy Tamil News

அமைச்சர் ராஜ கண்ணப்பன் 411 கொடி மதிப்பிலான அரசு நிலத்தை முறைகேடகா ஆக்கிரமித்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சர் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மற்றும் அறப்போர் இயக்கத்தை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

411 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு; அமைச்சர் இராஜகண்ணப்பன் மீதான அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

அடக்குமுறைக்கு அஞ்சாமல், அதிகாரத்திற்கு அடிபணியாமல், எவ்வித சமரசத்திற்கும் ஆட்படாமல், அறத்தின் வழி நின்று அரசின் தவறுகளை, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாகப் புரியும் ஊழல்களைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெரும்போர் புரியும் அறப்போர் இயக்கத்திற்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!

திராவிட மாடல் அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக, சென்னை ஜி.எஸ்.டி சாலையில் 411 கோடி ரூபாய் மதிப்புள்ள, நான்கரை ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆவணங்களுடன் வெளியிட்டுள்ள ஆதாரப்பூர்வமான ஆதாரங்கள் அதிர்ச்சியளிக்கிறது. அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர் இராஜ கண்ணப்பனை ஊழல் புகாரிலிருந்து தப்புவிக்க திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கும் இடையே BSNL அலுவலகத்திற்கு அருகே, பரங்கிமலை கிராமம் "நில அளவை எண் (Survey No) 1353, எண் 12, GST சாலை" என்ற நில அளவை எண்ணிற்கான நிலம், அரசு நிலம் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகல் உள்ளது. மேலும், நில அளவை எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் நில அளவை எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று அரசின் வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலந்தூர் வட்டாட்சியர், சென்னை தெற்கு இணை அலுவலக சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் நில அளவை எண் 1352, 1353 உள்ளிட்ட பல நில அளவை எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும், இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த நில அளவை எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும், இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளதையும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டு, பிறகு நாடு விடுதலைப் பெற்ற பிறகு அந்நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலந்தூர் வட்டாட்சியர், மேற்குறிப்பிட்ட நில அளவை எண்ணில் எத்தகைய பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும், இதற்கு முன்பாகப் பதிவு செய்திருந்தால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறிய பிறகும், அப்பத்திரப்பதிவுகள் இன்றுவரை ரத்து செய்யப்படாததோடு, 2018ல் இந்நிலங்களை ரூபாய் ஏழு இலட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டதுபோல, அமைச்சர் இராஜகண்ணப்பனின் மகன்கள் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களாக உள்ள டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனம் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளது என்றும் அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமைச்சர் இராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் இயக்குநர் மற்றும் பங்குதாரர்களாக உள்ள அந்நிறுவனம், நில அளவை எண் 1353 மற்றும் 1352 ல் உள்ள 4.52 ஏக்கர் அளவிலான அந்நிலங்களை அபகரிப்பதற்காகக் கடந்த 1991 முதல் 2018 வரை பல பத்திரப்பதிவுகளைச் செய்துள்ளதும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டி மதிப்பின்படி இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு 226 கோடி ரூபாய் ஆகும். ஆனால் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஏறத்தாழ 411 கோடி ரூபாய் ஆகும்.

முறைகேடுகள் நடைபெற்றுள்ளதற்கான ஆதாரப்பூர்வமான ஆவணங்களை அறப்போர் இயக்கம் வெளியிட்ட பிறகும், முதன்மை அமைச்சர்களில் ஒருவராக இராஜ கண்ணப்பன் இருப்பதாலேயே அவரது மகன்கள் மீதான நில அபகரிப்பு புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப்படுத்துகிறது. தன் மீது எவ்வித பழியும் வராமலிருக்க இன்னும் எத்தனை ஊழல் புகார்களை திமுக அரசு இப்படி மூடி மறைக்கப்போகிறது? திராவிட மாடலின் ஊதுகுழலாகச் செயல்படும் ஊடகங்கள், வாடகை வாய்கள், தோழமை கட்சிகள் அறப்போர் இயக்கத்தின் இக்குற்றச்சாட்டு குறித்து வாய்திறவாமல் அமைதி காப்பது ஏன்? ஊழல் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரிப்பதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? பொதுமக்களின் நிலங்களை அரசு அபகரிக்கிறது; அரசு நிலங்களை அமைச்சர்கள் அபகரிக்கின்றனர். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? 

ஆகவே, அரசு நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் இராஜ கண்ணப்பனின் மகன்கள் மீதான அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது, எவ்வித அரசியல் தலையீடும் இன்றி விரைவான, நேர்மையான நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்றும், அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசு நிலத்தை அபகரித்த அமைச்சர் இராஜ கண்ணப்பன் மற்றும் அவரது மகன்கள் மீதும், நில அபகரிப்புக்குத் துணைபோன அரசு அதிகாரிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இவ்வறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment