தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நான் ஆட்சிக்கு வந்தால் இந்த பாடலையே தூக்கிவிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
டி.டி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்ட விழா, நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டு பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுனர் வேண்டுமென்றே இப்படி செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து விடுபட்ட வரிகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்ற வரிகளை விட்டுவிட்டு ஆளுனர் பாடுவாரா என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆளுனர் மாளிகையின் ஆலோசனர் திருஞானசம்பந்தம் விளக்கம் அளித்திருந்தார்.
ஆளுனர் பற்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் திராவிடம் என்ற வரி விடுபட்டுள்ளது. குழுவினரின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது. இதற்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுனர் மற்றும் ஆளுனர் மாளிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ் மற்றும் மாநில உணர்வுகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஆளுனர், அவற்றை தொடர்ந்து உயர் மட்டத்தில் வைத்திருப்பார் என்று விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம வரி விடுபட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நீக்கம். 50 ஆயிரம் ஆண்டு மூத்த மொழி தமிழை கொன்று தெருவில் வீசும் போது, ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்து விழும்போது, ஆந்திராவில் 20 தமிழர்களின் சுட்டுக் கொல்லும் போது வராத கோபம் திராவிடம் என்ற வரியை தூக்கியதும் வருகிறதா. நாம் தமிழர் ஆட்சியில் இந்த பாடலே இருக்காது தூக்கி விடுவோம் அப்ப என்ன செய்வீங்க?
இரண்டு கேள்வி , பதில் சொல்லுங்க
யார் திராவிடர்? திராவிடம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீமானின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil