விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து சீமானுக்கு வரவேற்பு குறைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நேற்று திடீரென சீமான் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், சந்திப்பு நடந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், இப்போதும் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், கடந்த 2017-ம் ஆண்டு தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், இது முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்த அரசியல் கட்சியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் யாருடனும் கூட்டணி இல்லை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்போடு நின்றுவிடாமல் 2 முறை தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், 3 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த 2020-ம் ஆண்டு தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார். ஆனால் அவர் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டபோது, அவர் தமிழர் அல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்தவர் சீமான்.
அவர் மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியினரும் பல அரசியல் மேடைகளில் ரஜினிகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். அதே சமயம் அவர் கட்சி தொடங்கும் அறிவிப்பை கைவிட்டபிறகு இந்த விமர்சனங்களும் நின்றுவிட்டது. தற்போது படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், காக்கா கழுகு கதை சொல்லி, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்தார். இதனால் விஜய் மற்றும் ரஜனிகாந்த் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கிய விஜய், அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதுவரை தனது தம்பி போன்றவர் விஜய் என்று கூறி வந்த சீமான், முதல் மாநாட்டில் திராவிடம் தனது கண்களில் ஒன்று என்று விஜய் கூறியதால், கொள்கை முரன்பாடு ஏற்பட்டு, சீமான் விஜய்க்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ஆனாலும் சீமான் பிறந்த நாளுக்கு விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து சீமானுக்கு போதிய வரவேற்பு இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நேற்று சீமான் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் தொடர்பான பேச்சுகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீமான் பிறந்த நாளுக்கு அவரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில், நேரில் சந்திக்க முடியாத சூழல் இருந்ததால், தற்போது சீமான் நடிகர் ரஜனிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இதனிடையே விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் சீமான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார். இதனால் 2026 சட்டசபை தேர்தலுக்கு ரஜினிகாந்த் ஆதரவை கேட்டுள்ளாரா சீமான் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“