முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது குறித்து பேசியுள்ள முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தமிழக அரசு தனது கடமையை செய்கிறது என்று கூறியுள்ளார்.
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அனைவருடனும இணைந்து பணியாற்றியுள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பண்ருட்டி ராமச்சந்திரனை உலகத்திலே உச்சபட்சமாக இருக்கும் ஐநா சபையில் உரையாற்ற அனுப்பிவைத்தார். அங்கு இந்திய மக்களின் வாழ்வாதாரம் குறித்து உரையாற்றி அதிமுகவுக்கு பெருமையை பெற்றுத்தந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரின் தொண்டு, தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதேபோல் பல கூட்டங்களில் அவர் மனதில் எண்ணத்தில் இருப்பதை சொல்லியிருக்கிறார்.
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா அவர்களின் வாக்குதான் வேத வாக்கு. மற்றவர்களின் வாக்கு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட கழகம் அதிமுக. தொண்டர்கள் தான் அதன் தலைமை பீடத்தில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பெற்றவர்கள் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவரிடம். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு தனது கடமையை செய்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. மேலும் திமுக அரசு உங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை 2 முறை முதல்வராக தேர்ந்தெடுத்தார்.
ஆளுங்கட்சி எதிர்கட்சி என இரண்டிலுமே அவருடன் நான் பயணித்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவருடன் ஒரு தொண்டனாகத்தான் பணியாற்றியிருக்கிறேன். தலைவர் என்ற நிலைக்கு நான் எப்போதுமே சென்றதில்லை. என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“