நெல்லையில் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் கே.பி.கே ஜெயக்குமார். திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இதனிடையே கடந்த இரு தினங்களாக ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடந்த இரு தினங்களாக ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில், இன்று ஜெயக்குமார் அவரின் வீட்டுக்கு அருகே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு தேசிய கட்சியில் மாவட்ட செயலாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘’நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விடியா தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 4, 2024
இந்த விடியா…
தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம். தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.
திரு. ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.