திருப்பூர் பல்லடம்
பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிர்பராக பணியாற்றி வந்த நேச பிரபு என்பவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வதாக காவல்துறை அவசர எண் 100"க்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்ட நிலையில், உள்ளூர் போலீஸாரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுததே மர்ம கும்பல் சரமாறியாக வெட்டியுள்ளது. எனது வாழ்க்கை முடிந்தது என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேச பிரபு கதறும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசப்பிரபு. பல்லடம் மற்றும் சூலூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களை துணிச்சலாக ஆவணங்கள் மற்றும் காட்சிகளை திரட்டி செய்தியை பதிவு செய்து வந்தவர் நேசப்பிரபு.
மேலும் பல்வேறு செய்திகளின் மூலம் அரசியல் கட்சியினருக்கும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் துணிச்சலாக வெளிச்சத்தை கொண்டு வந்தவர் என்பதால் பல்வேறு தரப்பிலிருந்தும் இவருக்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டை நோட்டமிட்ட காரில் வந்த கும்பல் செய்தியாளர் நேசப்பிரபு குறித்து விசாரித்துள்ளனர்.
குறிப்பாக கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் உள்ள பேக்கரி, செல்போன் கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் தன்னை பற்றி மர்மகும்பல் விசாரிப்பதை அறிந்து கொண்ட செய்தியாளர் நேசப்பி்ரபு, இது தொடர்பாக உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதில் நான்கு மணி நேரத்திற்கு மேல், தொடர்ச்சியாக தான் சுற்றிவளைக்கப்பட்டதை காவல் துறையிடம் பதிவு செய்தும், காவல்துறை அலட்சியம் காட்டியுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொலைபேசியில் பேசும்போது, மர்ம கும்பல் வந்த காரில் பதவி எண் இல்லை, வாகனத்தின் நிறம், குற்றவாளிகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்க, நேச பிரபுவும் தொடர்ச்சியாக தகவல்களை பதிவு செய்துள்ளார். அதேபோன்று காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்ட காவலர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு தருமாறு அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.
அப்போது உடனடியாக தன்னைக் காப்பாற்ற வருமாறு காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் செய்தியாளரை வெட்ட துரத்தியுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட நேச பிரபு உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த அலுவலக அறைக்குள் உள்ளே சென்று உள்பக்கமாக தாளிட்டு கொண்டார். இதனையடுத்து கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த செய்தியாளர் நேச பிரபுவை வெளியே இழுத்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதனைப் பார்த்த பங்க் ஊழியர்கள் வருவதைப் பார்த்து உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இரண்டு கைகள் மற்றும் ஒரு இடது கால் மற்றும் தலை என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த நேசபிரபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பங்க் ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்களால் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நேசபிரபுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை அறையில் வைத்து நேசப்பிரபுவுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சுமார் நான்கு மணி நேரமாக காவல் துறையுடன் நேசபிரபு நடத்திய உரையாடல்கள் அவரது செல்போனில் பதிவாகியுள்ள நிலையில், தன்னை சுற்றிவளைத்து தனக்கு உயிருக்கு ஆபத்து என ஒருவர் கூறியும் சட்டம் ஒழுங்கில் காவல்துறை மெத்தனம் காட்டி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு பத்திரிகை சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மேலும் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தங்களது கன்னடத்தை தெரிவித்துள்ள பத்திரிக்கை சங்கங்கள் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“