டி.டி.வி தினகரன் ஆதரவு பெற்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சியை கலைத்து வேறு கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இருந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை உரிமை குழு நோட்டீஸ் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சட்டமன்ற கெறாடா சக்கரபாணி, இதே கோரிக்கைக்காக டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்கள் உள்ளிட்ட எழு வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தனது வாதத்தை முன் வைத்து வாதாடினார். எந்த விதிகளையும் பின்பற்றமாலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் தகுதி நீக்க உத்தரவு உள்ளது. மனுதாரர்களிடம் உரிய விளக்கம் அளிக்க கால அவகாசம் கொடுக்கவில்லை. இவர்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுனரை சந்தித்த பின்னரே, இரண்டு நாள் கடந்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுனரை சந்தித்து பெருன்பான்மை நிரூபிக்கக் கோரினார். ஆனால் நாங்கள் அதிமுகவில் நீடிக்கும்போது, எந்த காரணத்துக்காக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள் என தெரியவில்லை. புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்ட நிலையிலேயே, தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். உள்நோக்கத்துடன் சபாநாயகர் செயல்பட்டுள்ளார் எனவே அவரின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதன் பிறகு சபாநாயகர் தரப்பில் மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம் ஆஜராகி தங்களின் தரப்பு வாதத்தை முன்வைத்தார். பேரவை தலைவரின் முடிவுகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதுதான், ஆனால் அதன் அதிகாரம் என்பது மிகக்குறைவு. சபையில் என்ன நடக்கனும், எதை அனுமதிப்பது என முடிவு செய்யும் உச்சபட்ச அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. புகாருக்கான ஆதாரங்களை நிரூபித்ததால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தரப்பையும் குறுக்குவிசாரணை செய்ய அனுமதிக்க முடியாது. இந்த வழக்கு என்பது சம்பவங்களின் அடிப்படையில் வேண்டுமானால் ஒரே மாதிரியாக இருக்கலாமே தவிர எடியூரப்பா வழக்குக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்துக்கும் அடிப்படையிலேயே எவ்வித சம்பந்தமும் இல்லை.
கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் , வெற்றிவேல் உள்ளிட்டோர் புகார் அளித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்கிறார்கள். அப்போது ஓ.பி.எஸ். தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக-வுக்கு உரிமை கோரும் வழக்கு நிலுவையில் இருந்தது. உண்மையான அதிமுக யார் என்ற முடிவு நிலுவையில் இருந்தபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு அன்று சபாநாயகர் வெற்றிவேல் உள்ளிட்டோர் மனுவில் முடிவு எடுத்து இருந்தால் அது இன்று தவறாக இருந்திருக்கும். ஏனெனில் தேர்தல் ஆணைத்தில் நிலுவையில் இருந்தும் ஓ.பி.எஸ் அணிக்கு எதிர் மனு தார்கள் அவர்ளின் புகார் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் கட்சி, மற்றும் சின்னத்தை முடக்கிவைத்திருந்தது.
மார்ச் 20ல் இருந்து டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்த நிலையில், கட்சி பெயர், சின்னம் உரிமை கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் மார்ச் 22 ஆம் தேதி அதிமுக கட்சி பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. அதனால் தான் அதில் உத்தரவிடவில்லை.
மேலும் எடியூரப்பா வழக்கில் உட்கட்சியில் பிரச்சினை அடிப்படையில் அவர்களின் சட்டமன்ற கட்சி தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் டி.டி.வி தரப்பினரை பொருத்தமட்டில் அவர்கள் தற்போதைய ஆட்சியை மாற்றிவிட்டு வேறு கட்சியின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் உள்நோக்கமாக இருந்தது. எனவே தான் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்தார்.
அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக ஜூன் 14 – ஜூலை 27 வரை முதல்வரை சந்தித்தோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூறுகிறார்கள். ஆனால் அவரை சந்தித்தது தொடர்பான விவரங்களை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். தன்னை சந்திக்கவில்லை என்ற முதல்வரை அழைத்து நிருபிக்க கூறமுடியாது.
ஆட்சி செய்பவரை மட்டும் மாற்ற வேண்டும் என்று ஆளுனரிடம் மனு கொடுத்ததாக சொல்கின்றனர். ஆனால் அந்த விவகாரத்தை மட்டும் வைத்து எட்டியூரப்பா விவகாரத்திடன் ஒப்பிடக்கூடாது. அந்த கடிதம் சார்ந்த மற்ற விசயங்களை சேர்த்து பார்க்கும் போது, இந்த கட்சியை ஆட்சியிலிருந்து, நீக்கி வேறு கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் தான் இவர்களை தகுதி நீக்கம் செய்யபட்டது இது விதிகளுக்கும், சட்டத்திற்கு உட்பட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதில் எந்த விதி மீறலும் இல்லை. இயற்கை நீதிக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என வாதிட்டார்.
இன்றும் சபாநாயகர் தரப்பில் வாதம் நிறைவடையவில்லை. இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.