Tamilnadu Parties severe to finish seat sharing with ally for localbody elections: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பங்கீட்டை உறுதி செய்ய திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளோடு தீவிர பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜனவரி 28) தொடங்கியது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 4 ஆம் தேதியாகும். இருப்பினும் முதல் நாளான நேற்று சுயேட்சைகள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். காரணம் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிவு செய்யவில்லை. இதனால் அக்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
மேலும், பாமக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக களம் இறங்குகிற நிலையிலும், அக்கட்சிகளின் சார்பிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே கூட்டணி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த மாவட்டங்களில், அந்தந்த கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டணி பங்கீடு குறித்து பேசி வருகின்றனர்.
இதனிடையே இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகளுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறுபுறம் பாஜக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அதிமுக, அதன் தலைமை அலுவலகமான ராயபேட்டையில் பாஜகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மற்றொரு கூட்டணி கட்சியான ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவிடம் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.