தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தை பலர் முற்றுகையிட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. தமிழ்த் தாய்க்கு என்ன கொம்பா இருக்கு? தமிழ்த் தாய் 3 ஆயிரம் ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தது என்று கேட்டவர் பெரியார். தமிழை சனியன் என்று சொன்ன பெரியார், அதையும் தமிழில் தான் எழுதினார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா என்று சீமான் பேசியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், சீமானுக்கு எதிராக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். இதில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை, முற்றுகையிட முயன்ற, தந்தை பெரியர் திராவிடர் கழகத்தினர் மற்றும் பெரியார் ஆதரவாளர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அதே சமயம், சீமானுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கூறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனிடையே, திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, உள்ளிட்ட சில அரசியல் கட்சி பிரமுகர்கள், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், பெரியார் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் வகையில், சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியலில் பெரும்பாலான தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதனால் சீமானின் அரசியல் வாழ்க்கை படும்பாதாளத்திற்கு சென்று விட்டது. அரசியல் வியாபாரத்திற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.
அதேபோல், சீமான் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். சீமான் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“