சென்னையில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆவின் டிலைட் பாலை திணிப்பது தனியாருக்கு சமமாக ஆவினும் மக்களை சுரண்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்த நிலையில், கடந்த வாரம், சென்னையில் பல பகுதிகளில் 48 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் உணவு பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான முக்கிய உணவாக இருக்கும் பாலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பலரும் கடுமையாக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் ஏற்பட்டுள்ள பால் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆவின் நிறுவனம் டிலைட் பாலை மக்களிடம் திணிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் இயல்பு நிலை திரும்பிய பகுதிகளில் கூட ஆவின் பாலோ, தனியார் பாலோ கிடைக்கவில்லை. அதனால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு மக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.
இயற்கை பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த கொழுப்பு
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 8, 2023
பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும்
ஆவின்!
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாலுக்கு தட்டுப்பாடு…
ஆவின் நிறுவனம் வழக்கமாக விற்பனை செய்யும் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்குக்கும் கீழ் குறைத்து விட்டு, அவற்றுக்கு மாறாக குறைந்த கொழுப்பும், அதிக விலையும் கொண்ட டிலைட் பாலை வழக்கத்தை விட பல மடங்கு கூடுதலாக உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் ஒரு பாக்கெட் ரூ.24க்கு விற்கப்படுகிறது. ஆவின் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 3.5% மட்டுமே கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலும் அதே விலைக்கு விற்கப்படுகிறது.
பச்சை உறை பாலுக்கான உற்பத்திச் செலவை விட, டிலைட் பால் உற்பத்திக்கான செலவு ஆண்டுக்கு ரூ.840 கோடி குறைவு ஆகும். அந்தக் கூடுதல் லாபத்தைக் கருத்தில் கொண்டு தான் டிலைட் பாலை ஆவின் அறிமுகம் செய்திருக்கிறது. அதற்கே மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பேரிடர் காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் மக்களைச் சுரண்டத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
பேரிடர் காலங்களில் மக்கள் மீது அக்கறையும், கருணையும் காட்ட வேண்டிய பொதுத்துறை நிறுவனமான ஆவின், எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பதற்கிணங்க, மக்கள் வாழவே வழியில்லாமல் தவிக்கும் போது, அவர்களிடம் அதிக லாபத்தை சுரண்ட நினைப்பது தவறு. ஆவின் நிறுவனம் அது செய்த தவறையும், அதன் பொறுப்பையும் உணர்ந்து கொண்டு, டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.