இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை படிப்பு மட்டுமல்லாமல் முதுகலை மருத்துவ படிப்புக்கும் நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் முதுகலை நீட் தேர்வு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றாலும் எம்.டி மற்றும் எம்.எஸ் மருத்து படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றகலாம் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மதிப்பெண் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும்.
காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன? முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான்.
ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும்.
முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும், தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.
மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.