ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ராமதாஸ், கட்சியின் அதிகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடியுள்ள நிலையில், ராமதாஸ் பா.ம.க தலைவர் இல்லை என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் பொறுப்புக்கான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 29 அன்று தனது மகன் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தான் மீண்டும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அன்புமணி தான் இன்னமும் பா.ம.க. தலைவராகத் தொடர்வதாக உறுதியாகக் கூறி வருகிறார்.
இது குறித்து கட்சி வட்டாரங்களின் தகவல்படி, ராமதாஸின் இந்த கடிதம் ஜூன் 30 அன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸின் செயல்பாட்டுத் திறனின்மையே அவரை செயல் தலைவராக்கி, தான் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கான காரணம் என்று ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ராமதாஸ் தனது இந்த முடிவுக்கு ஆதரவாக, 1,413 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 21 பொதுக்குழு உறுப்பினர்களின் கையொப்பங்கள் மற்றும் புகைப்படங்களையும் இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக ஒரு கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
ராமதாஸின் கூற்றுப்படி, அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் மே 28 அன்று முடிவடைந்தது. அடுத்த நாளே, அதாவது மே 29 அன்று, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளால்” தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார். இந்த தலைமைப் போர் ஜூலை 8 (நேற்று) அன்றும் தொடர்ந்தது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருமே தனித்தனியே கூட்டங்களை நடத்தி, ஒன்றுக்கொன்று முரணான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இது கட்சியின் உள்ளே நிலவும் பிளவையும், மோதலையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவும், இந்தக் கட்சியின் எதிர்காலமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பா.ம.க.வில் நடக்கும் இந்த அரசியல் களம், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் நிலையை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து கட்சி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுது்தியுள்ளது.