/indian-express-tamil/media/media_files/2025/04/17/JuB1y59ZHLo4dRcvuG0a.jpg)
தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில், கடந்த சில மாதங்களாக தந்தை – மகன் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், என் மூச்சு இருக்கும்வரை நானே பா.ம.க தலைவர் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் பா.ம.க.வில் கடந்த சில மாதங்களாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மோதல், அதிகரித்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
இவர்களுக்கு இடையே நடந்து வரும் மோதல் சமாதானம் ஆக வேண்டும் என்று கூறி தஞ்சையில் பா.ம.க. சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்ட பலரும் ராமதாஸ் – அன்புமணி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு பா.ம.க.வினர் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ், தினசரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்,
அதன்படி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன் என்று நேற்று சொன்னேன். ஆனால், அவரது செயல்பாட்டை பார்க்கும் போது, எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்து இருக்கிறேன். ஆனால் மாநாட்டிற்கு பிறகு, நடக்கும் செயல்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கட்சியினர் கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் எனக்கு ஆதரவை வழங்குகின்றனர். நேற்று தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவி கொடுப்பேன் என்று சொன்னதற்கு 100க்கு 99 சதவீதம் பேர், அப்படி சொல்ல கூடாது கடைசி வரை ஐயா தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னுடைய மூச்சு காற்று நிற்கும் வரை நான் தலைவர் பதவியில் இருப்பேன். கட்சி ஆரம்பிக்கும் போது எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வர கூடாது என்று, நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.
அன்புமணியை பார்த்தால் எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. கட்சி நிர்வாகிகள் கூறியதால், 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் விருது வாங்கிய அன்புமணி, தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும் என்று சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. இந்த வார்த்தையை அவரிடம் சொன்னால், நான் மகிழ்ச்சியாக தான் வைத்து இருக்கிறேன் என்று சொல்வார்.
மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை தூக்கி தாயை அடிக்கிறார். இது மகிழ்ச்சியாக வைத்து இருப்பதா? தனி ஒரு மனிதனாக இரவு, பகலாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்திருக்கிறேன். 100 ஆண்டுகள் இருப்பீங்க என்று சொல்லி விட்டு மார்பிலும், பின்னாடியும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திக்கொண்டு இருக்கிறார். அவரை நினைக்கும் போது எல்லாம் வலி ஏற்படுகிறது. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால் அது பொய் என சொல்கிறார். இதற்கு ஒரே தீர்வு செயல் தலைவராக இருக்கிறேன். ஐயா சொல்வதை கேட்கிறேன் என்று கூறுவது தான் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.